கொழும்பில் உள்ள பெற்றோரை பார்க்க தனியாகப் புறப்பட்ட 7 வயது மாணவன்

1 Min Read

ஹட்டன் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன், ஹட்டன் பஸ் நிலையத்தில் வைத்து இன்று (27) மீட்கப்பட்டு ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஹட்டன் இ.போ.சபையின் (SLTB) பஸ் நிலைய நேரக் காப்பாளரின் சாதுரியமான செயலினாலேயே இந்தச் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்புப் பகுதியில் தங்கி வேலை செய்து வரும் தனது பெற்றோரைப் பார்ப்பதற்காக, தான் தனியாகப் பஸ் மூலம் கொழும்புக்குச் செல்லப் போவதாக அந்தச் சிறுவன் பஸ் நிலைய நேரக் காப்பாளரிடம் தெரிவித்துள்ளார். மேலும், கொழும்பு செல்வதற்காகத் தனது பெரியம்மா (தாயின் அக்கா) தனக்குக் காசு கொடுத்ததாகவும் அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளார்.

7 வயதுச் சிறுவன் ஒருவன் தனியாகக் கொழும்பு செல்ல முயன்றதைக் கண்டு சந்தேகமடைந்த நேரக் காப்பாளர், சிறுவனைப் பஸ்ஸில் ஏற அனுமதிக்காது தடுத்து வைத்துள்ளார். பின்னர் இது குறித்து உடனடியாக ஹட்டன் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகளிடம் அச்சிறுவன் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.

இது குறித்து ஹட்டன் பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவரிடம் வினவியபோது:

“பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்தச் சிறுவன் தொடர்பில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதிமன்ற நடைமுறைகளின் பின்னர், சிறுவனின் முறையான பெற்றோரை அல்லது பாதுகாவலர்களைக் கண்டறிந்து அவர்களிடம் சிறுவனைப் பத்திரமாக ஒப்படைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *