
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிணவறையில் தொடரும் பிணக் கொள்ளை! ஏழை மக்களின் கண்ணீரில் காசு பார்க்கும் கும்பலை உடனே கைது செய்க!
இடம் : மட்டக்களப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிணவறை (Mortuary) பகுதியில், மரண அவலத்தோடு வரும் அப்பாவி மக்களையும் உறவினர்களையும் இலக்கு வைத்து நச்சுப் பாம்புகளாய் சுற்றியிருக்கும் ஒரு கொள்ளை கும்பலின் அட்டூழியங்கள் தற்போது எல்லை மீறிப் போயுள்ளன. தங்களின் அன்பிற்குரியவர்களை இழந்து, சொல்லொணாத் துயரத்தில் கதறி அழும் குடும்பங்களின் கண்ணீரைக் கூட தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, அங்கு ஒரு திட்டமிட்ட “பணப் பறிப்பு” மாஃபியா அரங்கேறி வருவதை மறத்தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தப் பகுதியில், எந்த வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழந்தாலும், மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனைக்காக உடலங்கள் எமது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கே கொண்டு வரப்படுவது வழமை. சட்ட நடைமுறைகளின் படி எவ்வித தடையுமின்றி நடக்க வேண்டிய இந்தச் செயல்முறையை, அங்குள்ள ஒரு சில சமூக விரோதிகளும் அவர்களுக்குத் துணையாகச் செயல்படும் இடைத்தரகர்களும் சேர்ந்து ஒரு வர்த்தகமாக மாற்றி வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல்கள்:
*ஆவணங்களை முடக்குதல் : பிரேதப் பரிசோதனை முடிந்து, உடலை உரிய நேரத்திற்கு வெளியில் கொண்டு வர வேண்டுமானால் இடைத் தரகர்களைத் திருப்திப்படுத்த வேண்டியுள்ளது. இல்லையெனில், வேண்டுமென்றே ஆவணங்கள் தாமதப்படுத்தப்படுகின்றன.
கட்டாயப் பணப்பறிப்பு: வாகனங்களை ஏற்பாடு செய்தல், சவப்பெட்டி தெரிவு செய்தல், உடலை விரைவாகப் பொறுப்பேற்றல் என ஒவ்வொரு கட்டத்திற்கும் இந்தக் கொள்ளைக் கும்பலுக்குப் பணம் கொடுத்தால் மட்டுமே காரியம் நடக்கிறது.
ஏழைகள் மீதான சுரண்டல்: பண வசதி படைத்தவர்கள் மட்டுமன்றி, அன்றாடக் காய்ச்சிகளான ஏழை எளிய மக்கள், தங்களிடம் பணமில்லாமல் தவிக்கும் போது கூட இந்தக் கும்பல் இரக்கமின்றித் தங்களின் கைவரிசையைக் காட்டுகிறது.
“உயிரிழந்த எமது உறவின் முகத்தைக் கடைசியாகப் பார்க்கக் கூட நிம்மதி இல்லை. அங்கும் காசு கொடுத்தால் தான் உடலைத் தருவோம் என்று அச்சுறுத்தும் பாணியில் பேசுகிறார்கள் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் ஆதங்கங்களையும் குமுறல்களையும் கண்ணீரோடு பகிர்ந்துள்ளனர்.
எமது கேள்வி மற்றும் கண்டனம்:
இந்தக் கொடூரமான சுரண்டல் உண்மையில் வைத்தியசாலை நிர்வாகத்திற்குத் தெரியாமல் நடக்கிறதா? அல்லது தெரிந்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் “கண்டும் காணாமல்” மௌனம் காக்கிறார்களா? வைத்தியசாலையின் உள்ளே, நிர்வாகத்தின் மூக்கிற்குத் தட்டினாற்போல் இந்த இடைத்தரகர்கள் எப்படிச் சுதந்திரமாக நடமாட முடிகிறது?
மரண வீட்டில் கூட லஞ்சம் கேட்கும் இந்த ஈனத்தனம், ஒட்டுமொத்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கே பெரும் அவமானத்தைத் தேடித்தருகிறது.
மறத்தமிழர் கட்சியின் கோரிக்கைகள்:
1.உடனடி விசாரணை: வைத்தியசாலை நிர்வாகம் உடனடியாகப் பிணவறைப் பக்கமாகத் தன் பார்வையைத் திருப்பி, அங்கு நடக்கும் முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும்.
2. இடைத்தரகர்களுக்குத் தடை: வைத்தியசாலை வளாகத்திற்குள் எவ்வித உத்தியோகபூர்வ அனுமதியுமின்றி நடமாடும் இடைத்தரகர்கள் உடனடியாகக் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
3.பொலிஸ் பாதுகாப்பு & கண்காணிப்பு: பிணவறைப் பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள் (CCTV) மற்றும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, மக்கள் எவ்வித அச்சுறுத்தலுமின்றி உடலங்களைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட வேண்டும்.
மரணத் துயரிலும் எமது மக்களின் உரிமைகளையும் நிம்மதியையும் பறிக்கும் எந்தவொரு சக்திக்கும் எதிராக மறத்தமிழர் கட்சி என்றும் சமரசமின்றிப் குரல் எழுப்புவோம். இந்த நிலையை வைத்தியசாலை நிர்வாகம் உடனே சீரமைக்கத் தவறினால், மிகவும் மோசமான நிலைக்கு எமது சமூகத்தை கொண்டு சேர்க்கும், என எச்சரிக்கின்றோம்.
“மக்களின் கண்ணீரை மூலதனமாக்காதே! ஊழல் கும்பலை ஒழித்துக்கட்டு!
இறைமை, நீதி, உரிமைக்கான குரல்,
வே.அன்பழகன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
மறத்தமிழர் கட்சி
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



