றோயலுக்கு எதிராக சாஹிரா 63 ஆண்டுகளில் முதல் வெற்றி

1 Min Read

டயலொக் பாடசாலை ரக்பி லீக் தொடரில் பலம்மிக்க கொழும்பு, றோயல் கல்லூரியை மருதானை சாஹிரா கல்லூரி அணி 63 ஆண்டுகளில் முதல்முறை வென்று வரலாறு படைத்துள்ளது.

றோயல் கல்லூரி விளையாட்டு வளாகத்தில் நேற்று முன்தினம் (09) நடைபெற்ற இந்தப் போட்டியில் அதிர்ச்சி கொடுத்த சாஹிரா வீரர்கள் முதல் பாதியிலேயே 12–05 புள்ளிகளால் முன்னிலை பெற்றனர். இரண்டாவது பாதியில் றோயல் கல்லூரியின் கடும் சவாலுக்கு மத்தியிலும் சிறப்பாக செயற்பட்ட அந்த அணி போட்டியை 29–26 என்ற புள்ளிகளால் வெற்றியீட்டியது.

இதன்போது சாஹிரா கல்லூரியின் பர்ஹான் பஸ்தல், முசில் சமத் மற்றும் சைபுல்லா சுல்பிகார் ஆகியோர் தலா ஒரு டிரைகளை பெற்றது அந்த அணியின் வெற்றிக்கு உதவியது. மறுபுறம் றோயல் கல்லூரி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியில் நான்கு டிரைகளை பெற்றபோதும் வெற்றியை உறுதி செய்ய முடியவில்லை. ரக்பி போட்டி ஒன்றில் சாஹிரா கல்லூரி இதற்கு முன்னர் கடைசியாக கொழும்பு றோயலை வீழ்த்தியது 1963 ஆம் ஆண்டிலாகும். அப்போது தேசிய அணி வீரர் இப்ராஹிம் ஹமீத் தலைமையிலேயே சாஹிரா அணி வெற்றியீட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *