பாட்டாளி வர்க்கத்தை கௌரவித்து பேரணிகள்
உழைக்கும் வர்க்கத்தினரான தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தினமாகவும் வென்றெடுத்த உரிமைகள் மற்றும் சாதனைகளைக் கொண்டாடும் தினமாகவும் சர்வதேச தொழிலாளர் தினம் இன்று (01) உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
140 ஆவது சர்வதேச தொழிலாளர் தினம் இம்முறை”தொழிலாளர் வர்க்கத்திற்கான ஒரு புதிய சவால்” என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. இம்முறை, மே தினத்தையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளால் கூட்டங்கள், பேரணிகள், பல்வேறு நிகழ்வுகள் கொண்டாட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 29 பிரதான மே, தினப் பேரணிகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.
ஆளும் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு, நுவரெலியா மாவட்ட மே தினக் கூட்டங்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ளன.அத்துடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின், மே தினக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் கொழும்பு, மாளிகாவத்தையிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு பொரளை கெம்பல் பூங்கா மைதானத்திலும் நடை பெறவுள்ளன. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகள் இம்முறை மே தினத்தில் கூட்டங்களையோ, ஊர்வலங்களையோ நடத்துவதில்லை என்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன.
கொழும்புக்கு வெளியில் அனுராதபுரம், குருநாகல், கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை உள்ளிட்ட பல நகரங்களில் மே தினக் கொண்டாட்டங்கள், பேரணிகள் மற்றும் கூட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.”மக்கள் அரசாங்கத்திற்கு மக்களின் சக்தி” என்ற கருப்பொருளில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள 21 மே தினப் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் நாட்டின் 21 மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது ஒரே கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தினப் பேரணிகளின் அதிக எண்ணிக்கையாகும்.
அந்த வகையில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதான மே தினக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில், இன்று மாலை 5.00 மணிக்கு மஹரகம நகரில் நடைபெறவுள்ளது. மே தின ஊர்வலம் பிற்பகல் 3.30 மணிக்கு தெல்கந்த சந்தியிலிருந்து புறப்பட்டு மஹரகம நகரை சென்றடையவுள்ளது.அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட மே தினக் கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில், காலை 11 மணிக்கு நுவரெலியா மாநகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதன்,மே தின ஊர்வலமானது நுவரெலியா பொது மருத்துவமனைக்கு அருகில் காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.தேசிய மக்கள் சக்தியின் ஏனைய மாவட்டக் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளன. அதன்படி, இரத்தினபுரி மாவட்ட மே தினக் கூட்டம் மற்றும் பேரணி என்பன பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.
அதேவேளை புத்தளம் மாவட்டப் பேரணி அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் சிலாபத்தில் பிற்பகல் 3.30 மணிக்கும் கம்பஹா மாவட்டப் பேரணி கடவத்தையில் மாலை 6.00 மணிக்கும், களுத்துறை மாவட்டப் பேரணி அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் பிற்பகல் 3.00 மணிக்கும் நடைபெறும். அமைச்சர் அனுர கருணாதிலகவின் தலைமையில் காலி மாவட்டப் பேரணி மாலை 5:00 மணிக்கும் நடைபெறவுள்ளன.



