அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை எப்போது?

5 Min Read
  •  – நாளை மறுதினம் முடிவுறும் இரு வாரகால யுத்த நிறுத்தம் 
  • இன்றைய பேச்சை காலவரையரை இன்றி ஒத்திவைத்த சமூக ஊடக பதிவுகள்

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் இன்று திங்கட்கிழமை இஸ்லாமாபாத்தில் சுமூகமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான இராஜதந்திர ஏற்பாடுகளைப் பாகிஸ்தான் மிகவும் மும்முரமாக மேற்கொண்டிருந்தது. இத்தகையதொரு சூழலில், லெபனானில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளதை முன்னிட்டு, வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்துக்காக ஹொர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) முழுமையாகத் திறந்துவிடுவதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்‌ஷி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை வரவேற்று சமூக வலைதளத்தில் பதிவிட்ட டொனால்ட் ட்ரம்ப், தமது நிர்வாகம் கொடுத்த கடும் அழுத்தம் காரணமாகவே ஈரான் இந்தப் பணிவுக்கு வந்ததாகக் குறிப்பிட்டதுடன், அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றாலும் அந்த ஒப்பந்தம் முழுமையாகக் கையெழுத்தாகும் வரை ஹொர்முஸ் நீரிணை மீதான முற்றுகை நடவடிக்கைகள் முழு வீச்சில் தொடரும் எனச் சனியன்று அறிவித்தார். அத்துடன், எதிர்வரும் 22 ஆம் திகதிக்குள் முறையான உடன்படிக்கை எட்டப்படாவிட்டால், ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத வகையிலான பாரிய தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கைகளும் சமூக வலைத்தளப் பதிவுகளும் வெளியான சில நிமிடங்களிலேயே, அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தனது நிலைப்பாட்டை அறிவித்தது. “வர்த்தகக் கப்பல்களுக்காக நாங்கள் ஹொர்முஸ் நீரிணையைத் திறந்துவிட்ட போதிலும், எங்களுக்கு எதிரான முற்றுகை தொடர்வதால் அதனை மீண்டும் மூடுவதற்குத் தீர்மானித்துள்ளோம்” என அறிவித்த ஈரான், இன்றைய திங்கட்கிழமை பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து தாம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இந்நிலையில் ஈரானிய பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் ‘ஹொர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அமெரிக்கா இந்த முற்றுகையைக் கைவிடாவிட்டால், இந்நீரிணை ஊடான போக்குவரத்து நிச்சயமாகக் கட்டுப்படுத்தப்படும். நம்மால் கடந்து செல்ல முடியாதபோது, ​​மற்றவர்களால் இந்நீரிணை வழியாகச் செல்ல முடியாது என்று அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இத்தகைய கொதிநிலையின் பின்னணியில் இன்று நடைபெறுமென பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேச்சுவார்த்தை திகதி நிர்ணயிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஹொர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் தரப்பினர் அறிவித்த பின்னர், அதனைக் கடக்க முயன்ற இரண்டு இந்திய எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரானிய புரட்சிகர காவல் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனையிட்டு கவலை வெளியிட்ட இந்தியா, ஈரானிய தூதுவரை அழைத்து ஆட்சேபனையும் தெரிவித்துள்ளது. இந்தக் கப்பல்கள் ஈராக்கில் இருந்து எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இருப்பினும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் பாகிஸ்தான் மத்தியஸ்தத்துடன் கடந்த 11 ஆம் திகதி 21 மணித்தியாலயங்கள் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி முடிவுற்றாலும், இரு தரப்பினரையும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வருவதற்கான அமைதிவழி முயற்சிகளை பாகிஸ்தான் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. இந்த முயற்சிகளை சவுதி அரேபியா, துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளுடன் கலந்துரையாடி பாகிஸ்தான் முன்னெடுப்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், சவுதி அரேபியா, கட்டார், துருக்கி ஆகிய நாடுகளுக்கு நேரில் விஜயம் செய்து இருதரப்பு பேச்சுக்களின் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடிய அதேநேரம், பாகிஸ்தான் முப்படைத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஈரானுக்கு விஜயம் செய்து அந்நாட்டு ஜனாதிபதி மசூட் பெஷஷ்கியான், வெளிவிவகார அமைச்சர் சபாநாயகர் முஹமது பாகர் கலிபாப் உள்ளிட்ட உயர் தலைவர்களை தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார். அனைத்து முயற்சிகளும் இரு தரப்பினரையும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவருவதை இலக்காகக் கொண்டிருந்தன.

இத்தகைய சூழலில் தான் திங்களன்று பேச்சுவார்த்தை இடம்பெறலாமென சி.என்.என் குறிப்பிட்டது. துருக்கியில் ஊடகவியலாளர்களை சந்தித்த பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார், பேச்சுக்கான 80 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. ஆனால் மீதமுள்ள இடைவெளிகளில் இரு தரப்பினரும் நெகிழ்வுத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கடந்த 08 ஆம் திகதி நடைமுறைக்கு வந்த யுத்த நிறுத்தம் நாளை 22 ஆம் திகதியுடன் முடிவுறவிருக்கிறது. கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், ஈரானிய துறைமுகங்களை இலக்கு வைத்து, ஹொர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாக முன்னெடுத்துள்ள முற்றுகை நடவடிக்கைகள் தொடரும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, இன்று மீண்டும் ஆரம்பமாவதாக இருந்த பேச்சுவார்த்தைகள் குறித்த சமிக்ஞைகள் வலுவிழந்ததுடன், அந்தப் பேச்சுவார்த்தைகள் திகதி குறிப்பிடப்படாமல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதன் விளைவாக அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை நடக்குமா? அல்லது போர் நிறுத்தம் நீடிக்குமா? அல்லது மீண்டும் போரா? என்ற கேள்விகள் பரவலாக எழுந்துள்ளன.

ஆனால் பாகிஸ்தான், இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி பகுதிகளில் அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைக்கான ஒழுங்குகளையும் ஏற்பாடுகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. எதிர்வரும் வௌ்ளிக்கிழமைக்கு முன்னர் இப்பேச்சுவார்த்தை இடம்பெறலாமென பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு அருகிலுள்ள ராவல்பிண்டியின் நூர் கான் விமானப்படைத் தளத்தில், இரண்டு அமெரிக்க கனரக சரக்கு விமானங்களான சி-17 குளோப் மாஸ்டர்கள் தரையிறங்கியுள்ளன. விமான நிலையத்திலிருந்து இஸ்லாமாபாத்தின் சிவப்பு வலயத்திற்குச் செல்லும் வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன, இது பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கிறது.

இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா மற்றும் மெட்ரியட் ஹோட்டல்கள் இரண்டிலிருந்தும் விருந்தினர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையும் புதிய முன்பதிவுகள் எதுவும் அனுமதிக்கப்படாது என்று அந்த பாதுகாப்பு வட்டாரங்கள் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளன.

மேலும் ஈரான் – அமெரிக்க பேச்சுவார்த்தை இடம்பெறும் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி பகுதிகளை உள்ளடக்கி உச்சகட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் நிமித்தம் பொலிஸ் மற்றும் இராணுவத்தை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் பாதுகாப்பு கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். தலைநகருக்கு அருகிலுள்ள ராவல்பிண்டி யில் 600க்கும் மேற்பட்ட பாதுகாப்பு சோதனைச் சாவடிகளை அமைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் தற்போது முன்னெடுத்து வரும் இராஜதந்திர நகர்வுகள், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் இவ்வாரத்திற்குள் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை ஆரம்பமாவதற்கான சாத்தியக்கூறுகளைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.

வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்துக்காக ஹொர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறந்துவிடுவதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அராக்‌ஷி விடுத்த அறிவிப்பை, டொனால்ட் ட்ரம்ப் ஆக்கபூர்வமாக வரவேற்றிருந்தால் இன்று இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சாத்தியமாகியிருக்கும்.

ஆனால், ஈரான் இணக்கப்பாட்டுக்கு வந்தாலும் தமது முற்றுகை நடவடிக்கைகள் தொடரும் என ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்ட பிடிவாதமான பதிவுகளே, இந்தப் பேச்சுவார்த்தைகள் தடைப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தன என்றால் அது மிகையாகாது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *