– வடக்கு ரயில் சேவை மற்றும் புதிய பாலங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள்
கொழும்பில் இன்று இடம்பெற்ற இந்திய வம்சாவளியினர் சந்திப்பில் உரையாற்றிய இந்தியத் துணை ஜனாதிபதி ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணன், இரு நாடுகளுக்கும் இடையிலான நாகரிகப் பிணைப்பை வலுப்படுத்தும் வகையில் 4 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

OCI அட்டை சலுகை: இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, OCI (Overseas Citizen of India) அட்டை பெறுவதற்கான தகுதியை 5 மற்றும் 6-ஆம் தலைமுறை வரை நீடிப்பதாக அவர் அறிவித்தார். இது புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்தியாவுடன் கொண்டுள்ள உறவை மேலும் சட்டரீதியாக பலப்படுத்தும்.
இந்திய வீடமைப்புத் திட்டம்: இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 4,000 வீடுகளின் இறுதித் தொகுதியை அவர் இன்று இணையவழியில் (Virtually) பயனாளிகளிடம் கையளித்தார்.
வடக்கு ரயில் சேவை: ‘டிட்வா’ (Ditwa) சூறாவளியால் பாதிக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையை இந்தியாவின் உதவியுடன் புனரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அங்கு மீண்டும் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
புதிய பெய்லி பாலங்கள்: 450 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய நிதியுதவிப் பொதியின் கீழ், பாதிக்கப்பட்ட சமூகங்களை இணைக்கும் வகையில் மேலும் 3 பெய்லி (Bailey) பாலங்கள் அமைக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
இந்த அறிவிப்புகள் இலங்கையின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கும், குறிப்பாக மலையகம் மற்றும் வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன.



