கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் கோளாறு காரணமாக ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து கருமங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில், ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எச்.எம்.ஜே.எம். ஹேரத் வெளியிட்டுள்ள அறிவித்தலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

திணைக்களத்தின் கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் செயலிழப்பைச் சீர்செய்யவும், அதனைப் புதுப்பிக்கும் (Update) அவசரப் பராமரிப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, நாளை (17) வெள்ளிக்கிழமை ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களிலும் பொதுமக்கள் சேவைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவை (One-day service) உள்ளிட்ட அனைத்துப் பொதுச் சேவைகளும் நாளைய தினம் மாத்திரம் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




