வெளிநாடொன்றில் பொலிசாருக்கும் குற்றவாளிகளுக்குமிடையிலான மோதலில் அப்பாவி இந்தியர் ஒருவர் தவறுதலாக கொல்லப்பட்டார்.
இந்நிலையில், அவரது உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்துவிட்டனர்!
வெளிநாட்டில் கொல்லப்பட்ட இந்தியர்
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவுக்கு வேலைக்காக சென்றவர் விஜய் குமார் மஹாட்டோ.

கடந்த அக்டோபர் மாதம், சவுதியில் பொலிசாருக்கும் குற்றவாளி கும்பல் ஒன்றிற்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தவறுதலாக விஜய் குமார் மீது குண்டு பாய்ந்துவிட்டது.
படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து, தன் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு, தான் பிழைக்கமாட்டேன் என்று கூறும் வீடியோ மற்றும் ஆடியோ செய்திகளை அனுப்பிய விஜய் குமார் பின்னர் உயிரிழந்துவிட்டார்.
உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
இந்நிலையில், விஜய் குமாரின் உடல் சவுதியிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஆனால், விஜய் குமாரின் குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்துவிட்டார்கள்.
விஜய் குமார் வேலை செய்த நிறுவனம் அவருக்கு இழப்பீடு வழங்குவதாக எழுத்துவடிவில் உறுதியளித்தால் மட்டுமே அவரது உடலை வாங்குவோம் என்றும் அவரது குடும்பத்தினர் கூறிவிட்டார்கள்.
விஜய் குமாருக்கு மனைவியும், ஐந்து மற்றும் மூன்று வயதே ஆன இரண்டு பிள்ளைகளும், வயதான பெற்றோரும் இருக்கிறார்கள்.
ஆக, இந்த இழப்பீடு என்பது அவர்களைப் பொருத்தவரை, தவறுதலாக கொல்லப்பட்ட விஜய் குமாரின் மரணத்துக்கான இழப்பீடு மட்டுமல்ல, அவரது குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்புக்கான விடயமும் என்பதாலேயே அவரது குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




