இலங்கையில் அரசியல் யாப்புருவாக்கமானது பிரித்தானியர் காலத்தில் 1833 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பினுடைய படி முறை வளர்ச்சியாக வளர்ந்து வருகின்றது. சுதந்திரத்தின் பின் இலங்கையில் பிரித்தானியர்களால் கொண்டு வரப்பட்ட அரசியல் யாப்புக்கள் இலங்கையின் அரசியல் பொருளாதார, சமூக கட்டமைப்புக்களில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வரை காலமும் இலங்கையில் உருவாக்கப்பட்ட
அரசியல் யாப்புக்கள் எவையும் முழு இலங்கையர்களையும் திருப்திப்படுத்திய ஒன்றாக அமையவில்லை. இதற்காகவே ஒரு அரசியல் யாப்பு கொண்டு வரும் போது அதற்கெதிராக ஒவ்வொரு சமூகங்களும் எதிர்ப்பை காட்டி வந்தன. சுதந்திரத்தின் பிற்பகுதியில் 1972 ஆம் ஆண்டு வரை பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பே நடைமுறையிலிருந்தது. இது இலங்கை மக்களின் இறைமையை பாதித்ததாக காணப்படுகின்றது. இதனால் 1972 ஆம் ஆண்டு இலங்கை அரசியல் தலைவர்களால் 1ஆம் குடியரசு அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது. இவ் யாப்பிலும் குறைபாடுகள் காணப்பட்டதனால் 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இவ் அரசியல் யாப்பும் எல்லா சமூகத்தினரையும் திருப்திப்படுத்தாத
காரணத்தினால் யாப்பில் பல சீர்திருத்ததங்கள் எற்படுத்தப்பட்டு இன்று வரை 19 அரசியல் சீர்திருத்தங்களுடன் நடைமுறையிலிருக்கின்றது. 19 ஆம் அரசியல் சீர்திருத்தத்தை தொடர்ந்து அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையானது 1948 ஆம் ஆண்டு சுதந்திரமடைந்தும் சோல்பரி அரசியலமைப்பே நீண்ட காலம் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. இதனால் இலங்கை
சுதந்திரமடைந்தும் இலங்கையர்களால் உருவாக்கப்படாத யாப்பு காணப்பட்டதன்
காரணமாக இலங்கைத் தலைவர்களால் யாப்புருவாக்க வேண்டும் என்ற சிந்தனை
இருந்து வந்துள்ளது. 1970 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் சுதந்திரக் கட்சி,
இடதுசாரிக் கட்சிகள், கூட்டணி முதன் முதலாக பாராளுமன்றத்தில் 2/3, பெரும்பான்மையை (116ஆசனங்கள்) பெற்றது (யோதிலிங்கம் 2004). இதனடிப்படையில் அவ்வரசாங்கத்தால் ஒரு யாப்புருவாக்கத்திற்கான முயற்சிகள்
முன்னெடுக்கப்பட்டன. அக்காலத்தில் இலங்கையில் பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா கொல்வின் ஆர்.டி சில்வா தலைமையில் 1 ஆம் குடியரசு அரசியலமைப்பு வரையப்பட்டது. 1972 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி முதலாம் குடியரசு அரசியல் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இவ் யாப்பானது சுதந்திர இலங்கையில் முதன் முதலாக இலங்கையர்களால் உருவாக்கப்பட்ட முதலாவது குடியரசு அரசியல் யாப்பாகக் காணப்படுகின்றது.
இவ் அரசியல் யாப்பானது இது வரை காலம் இருந்தது போல் அல்லாமல் சில
விசேடமான அம்சங்களை கொண்டிருந்தது. முக்கியமாக மக்கள் இறைமை, அடிப்படை உரிமைகள், சுதந்திரங்கள், அரசியலமைப்பு நீதிமன்றம், தேசிய அரசுப் பேரவை,
குடியரசின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சரவை போன்ற விசேட அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவ் யாப்பின் மூலம் இறைமை பொருந்திய தேசிய அரசுப்பேரவை, முதன் முதலாக அடிப்படை உரிமைகள் என்னும் பகுதி
சேர்க்கப்பட்டமை மிகச்சிறப்பான அம்சங்களாக நோக்கப்படுகின்றது. இவ் அரசியல திட்டத்திலும் சிறப்பான அம்சங்கள் காணப்படுகின்ற அதே நேரம் பல குறைபாடுகளும் காணப்படுகின்றது. அடிப்படை உரிமைகள் என்னும் பகுதி சேர்க்கப்பட்டாலும் உரிமைகள் மீறப்படும் போது அதற்கான சட்ட அந்தஸ்து என்பது குறிப்பிடப்படாமை, அரசியலமைப்பு நீதிமன்றத்தின் இறைமையை சவாலுக்குள்ளாக்கியமை, இவ் யாப்பின்
மூலமே சிங்கள மொழி அரசகரும மொழியாக்கப்பட்டமை மற்றும் பொதுஜன முன்னணி தேர்தலில் 50 வீதமான வாக்குகளைப் பெற்றதால் இவ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட யாப்பாக காணப்பட்டதால் மக்கள் ஆதரவு பெருமளவில் இருக்கவில்லை போன்ற காரணங்களால் இலங்கையில் புதிய யாப்பு உருவாக்க வேண்டிய தேவை இருந்து வந்துள்ளது. இவ் அரசியலமைப்பு இலங்கையில் 2 ஆம்
குடியரசு அரசியல் யாப்பு அமுலுக்கு வரும் வரையில் நடைமுறையிலிருந்தது
(யோதிலிங்கம் 2004).
1977 ஆம் ஆண்டு தேர்தலில் 2/3 பெரும்பான்மை பெற்ற ஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்ட ஒரு அரசியலமைப்பே இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு ஆகும். ஐக்கிய தேசியக்கட்சியின் 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் அரசியமைப்பு சீர்திருத்தத்திற்கான யோசனை முன்வைக்கப்பட்டு அதன் பின்
ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான ஆதரவு கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ் அரசியல் யாப்பு 1978 ஆம் ஆண்டிலிருந்து இன்று முதல் 19 திருத்தங்களுடன் நடைமுறையிலிருக்கின்றது. இலங்கையர்களால் உருவாக்கப்பட்டு நீண்ட காலம் நடைமுறையிலிருக்கின்ற ஒரு அரசியல் யாப்பாகவும் இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு விளங்குகின்றது. இவ் அரசியலமைப்பானது சில விசேடமான
விடயங்களை கொண்டுள்ளது. அந்தவகையில் இவ் அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள், நிறைவேற்றதிகாரங் கொண்ட ஜனாதிபதி, விகிதாசாரத் தேர்தல் முறை,
பாராளுமன்ற முறை, ஒம்புட்ஸ்மன், ஒப்பங்கோடல், பொதுச்சேவை ஆணைக்குழு என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பில் 20 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு
நடைமுறையிலிருக்கின்றது. இதில் முக்கியமாக 13 ஆம் சீர்திருத்தம் 17 ஆம்
சீர்திருத்தம், 18 ஆம் திருத்தம், 19 ஆம் சீர்திருத்தம் என்பன காணப்படுகின்றன.
13ஆம் சீர்திருத்தம் இரண்டாம் குடியரசு அரசியல் அமைப்பில் 1987 ஆம் ஆண்டு
ஜே.ஆர் ஜெயவர்த்தனாவிற்கும் இந்திய பிரதமர் ராஜிவ் காந்திக்கும் இடையில்
மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் விளைவாக உருவாக்கப்பட்டதே 13 ஆம்
சீர்திருத்தம் ஆகும். இச் சீர்திருத்தம் மூலம் முக்கியமாக இலங்கையில் மாகாண சபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் மாகாண சபை முறை 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாணசபைச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது (குணரத்தினம், 2008).
17 ஆவது அரசியல் சீர்திருத்தம் 2001 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பில்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்களாக அரசியலமைப்பு பேரவை, பகிரங்க சேவை ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு என்பன ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ் சீர்திருத்தம் மூலம் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரங்கள் குறைக்கப்பட சுயாதீன
ஆணைக்கழுக்களின் அதிகாரம் அதிகரிக்கப்பட வாய்ப்பு வழங்கியது (செல்வகுணபாலன், 2007).
அரசியலமைப்புக்கான 18 ஆவது சீர்திருத்தம் 2010 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பில் கொண்டு வரப்பட்டது. இக்காலத்தில் ஜனாதிபதியாக இருந்த
மகிந்தராஜபக்ச அவர்களினால் கொண்டுவரப்பட்டது. ஜனாதிபதி எத்தனை தடவையும் பதவி வகிக்கலாம் என அதிகாரம் கொண்டு வரப்பட்டமை, அத்துடன் ஜனாதிபதி 3 மாதங்களுக்கு ஒரு தடவை பாராளுமன்றத்திற்கு வருகை தருவதுடன் வாக்களிக்கும் உரிமையைத் தவிர அனைத்து உரிமைகளுக்கும் உரித்துடையவர் என்றும் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரம் அதிகரிக்கப்படுவதற்கு வாய்ப்பாக காணப்பட்டது. முக்கியமாக
பாராளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இவ் அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டமை ஜனாதிபதி
எதேச்சதிகாரமாக செயற்பட காரணமாகியது என்ற குறைபாடு முன்வைக்கப்பட்டது.
இலங்கையில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலினூடாக புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இவ் அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கம் என்ற தொனிப்பொருளில் ஆட்சிக்கு வந்தது. இவ் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 19 ஆம் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. இதன் காரணமாக அரசியலமைப்பில் 19 ஆம் சீர்திருத்தம் ஏற்படுத்தப்பட்டது. அரசியலமைப்பிற்கான 19 ஆம் சீர்திருத்தம் 2015 ஆம் ஆண்டு
மேற்கொள்ளப்பட்டது. இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களால் கொண்டுவரப்பட்டது. இது இலங்கை வரலாற்றில் முக்கியமான ஒரு யாப்பு சீர்திருத்தமாகும். இதன் படி,
- இரு தடவைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக முடியாது
- ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடமாக குறைக்கப்பட்டது
- ஆணைக்குழுக்கள் சுதந்திரமாக இயங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டன.
- 35 வயதிற்கு குறைந்தோர் ஜனாதிபதியாக முடியாது.
- தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது (பிரசாத், 2016)
- போன்ற விசேடமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இருந்தாலும் இவ் அரசியல்
திட்டம் தொடர்பாக நீண்ட காலமாக பல குறைபாடுகள் காணப்படுகின்றதால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்புருவாக்க முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதனடிப்படையில் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக
மாற்றி அதில் பிரதான வழிகாட்டல் குழுவொன்றும் 6 உப குழுக்களும் அமைக்கப்பட்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அவை இடைக்கால அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சீர்திருத்தம் பொது மக்களிடம் இருந்து கருத்துக்களை அறிவதற்காக அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறி குழுவினை அமைத்து
அரசாங்கம் முதன் முதலாக பொதுமக்கள் கருத்தறிந்து அவற்றினடிப்படையில் ஒரு
அரசியலமைப்பு உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்துக்களை கண்டறிந்த குழு அவற்றினை தொகுத்து ஒரு அறிக்கையினை மே மாதம் 2016 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்புருவாக்க
செயல்முறையில் சிறுபான்மையினரின் பங்கு முக்கியமான ஒன்றாக விளங்குகின்றது.
தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகளான சம்பந்தன்இ எம்.ஏ சுமந்திரன் போன்ற
தலைவர்களையும் இணைத்து அரசாங்கம் அரசியலமைப்புச் சபையின்
வழிபடுத்தற் குழுவை உருவாக்கியுள்ளது. குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினுடைய
ஆதரவானது அரசாங்கத்திற்கு அவசியமானதாக விளங்கி வருகின்றது.
இதனடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ்த்தேசிய
கூட்டமைப்பினுடைய பங்கு என்பதும் தவிர்க்கப்பட முடியாத ஒன்றாக காணப்படுகின்றது.
2020 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் கொண்டு வரப்பட்டதுடன், அதனூடாக அரசியல் யாப்பின் கீழ் 20ஆம் சீர்திருத்தமும் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரித்து, சட்டத்துறை, அமைச்சரவையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரித்தன. குறிப்பாக இரட்டை பிரஜாவுரிமை உள்ள ஒருவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பை உருவாக்கியது.
யாப்பு உருவாக்கிய காலம் முதல் பல்வேறுபட்ட விமர்சனங்களையும், நெருக்கடிகளையும் உருவாகிக் கொண்டுதான் வருகின்றது. இதனால் இரண்டாம் குடியரசு யாப்பில் உள்ள நெருக்கடிகளை தவிர்த்து அதற்கு தீர்வாக புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் நீண்ட காலம் பேசப்பட்டாலும், தற்போது கோட்டபாய அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருவதை காணலாம். இது தொடர்பில் புதிய யாப்பானது இலங்கை வாழ் சிறுபான்மை மக்களின் நிலைப்பாட்டையும், புதிய யாப்பு உருவாக்கத்திற்கான அவர்களது யோசனைகளையும், பரிந்துரைகளையும் கொண்டு யாப்பு உருவாக்க வேண்டும் என்ற கருத்து வலுத்துள்ளது.
புதிய யாப்பு குறித்த பல்வேறு யோசனை மற்றும் பரிந்துரைகளை சிறுபான்மை மக்களால் அனுப்பப்பட்டன. அதிகாரப் பகிர்வு, உரிமைகள், தேர்தல் முறைமை தொடர்பான விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவை. குறிப்பாக அதிகார பகிர்வின் தேவை குறித்தும் யோசனைகளை முன் வைத்தனர். சுயாட்சி, மாகாணசபை முறைமையில் ஆளுநர் அதிகாரம் வரையறுப்பு, பொலிஸ் காணி தொடர்பான விடயங்களை முழுமையாக வழங்க வேண்டும் என்பது தொடர்பில் யோசனைகளை முன்வைத்தை அறியலாம். அதேபோல் மாகாணசபை முறையிலே தெரிவாகும் உறுப்பினர்களை கொண்ட ஒரு இரண்டாம் மன்றம் உருவாக்க வேண்டிய அவசியம் குறித்தும் சமகாலத்தில் பேசப்பட்டன. இரண்டாம் மன்றத்தில் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், அது சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் ஏற்பாடாக அமைய வேண்டும் என்றும் யோசனைகள் சிறுபான்மை மக்களால் முன்வைக்கப்பட்டது. உண்மையிலேயே சிறுபான்மை மக்கள் விரும்புவது ஜனநாயக சோசலிச குடியரசு யாப்பே, ஆனால் அங்கு சம வாய்ப்பும், சம கவனிப்பு என்பன ஒரே நாடு- ஒரே சட்டம் என்ற விடயத்தினுள் அடங்க வேண்டும் என்பதே பெரும்பாலும் முன்வைக்கப்பட்ட கருத்தாகும்.
எனவே மேற்குறிப்பிட்டவாறு இலங்கையின் யாப்பு உருவாக்க அனுபவமானது சிக்கல் மற்றும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டது. காரணம் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் காலத்திற்கு காலம் வலுத்துள்ள விமர்சனங்களும், கருத்துக்களும் ஆகும். அவற்றை நீக்குதலும், புதிய 3ஆம் குடியரசு யாப்பை வரையும் முயற்சியிலே அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
S. Vithurshan,
Special in political science,
University of Peradeniya.



