ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
UPDATE: சிறைச்சாலையின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது (10.22 am)
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம், அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்று என நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும் ”நீர்கொழும்பில் இடம்பெற்றது கைதிகளுக்கு இடையிலான மோதலாகும்; ஆனால் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றது கைதிகளுக்கும் சிறைச்சாலை நிர்வாகத்திற்கும் இடையிலான மோதலாகும்.
சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை முற்றாகக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளே இம்மோதலுக்கு முக்கிய காரணமாகும். போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான கைதிகளே இம்மோதலைத் தொடங்கியதாகப் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் இரவில் சிறைச்சாலையின் பல பகுதிகளை உடைத்துக்கொண்டு வெளியே தப்பிச் செல்ல கைதிகள் மேற்கொண்ட சதி முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரை (STF) ஈடுபடுத்தி சிறைச்சாலையின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று அமைச்சர் தெரிவித்தார்.
UPDATE: மஹர சிறை பதற்றம் பூரண கட்டுப்பாட்டுக்குள்; கைதிகள் உரிய சிறையில் (2026.08.02) 9.39 am
மஹர சிறைச்சாலையில் நேற்றையதினம் (01) நிலவி வந்த அமைதியற்ற சூழல் தற்போது முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பெர்ரிக் வுட்லர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அமைதியைப் பேணும் நோக்கில் பின்வரும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
📍 246/கெந்தலியத்த பாளுவ – மேற்கு
📍 246/சி கெந்தலியத்த பாளுவ – வடக்கு
📍 181/ஜீ தம்புவ
ஊரடங்கு அமுலில் இருந்தாலும், அப்பகுதி மக்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பாதுகாப்புப் பிரிவினருடன் கலந்துரையாடி அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறை மோதல் குறித்து விசாரிக்க இராணுவத் தளபதி அவசர விஜயம் (11.40pm)
சிறைச்சாலையின் பாதுகாப்பு நிலைமைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக இராணுவத் தளபதி அவசரமாக மஹர சிறைச்சாலை வளாகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
மறு அறிவித்தல் வரை ராகம பொலிஸ் பிரிவின் 3 பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் (10.40 pm)
மறு அறிவித்தல் வரையில் ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 3 பகுதிகளுக்கு பொலிஸ் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,கெந்தலியத்த வடக்கு ,கெந்தலியத்த மேற்கு ,தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
UPDATE: மஹர சிறைச்சாலையில் விமானப் படை கண்காணிப்பு (9.45 pm)
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையைக் கண்காணித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இலங்கை விமானப் படை வான்வழி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சிறை வளாகத்தின் நிலைமையைத் தொடர்ந்து கண்காணிக்க இலங்கை வான்படையின் Bell 412 ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன்கள் (கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
UPDATE: மஹர சிறைச்சாலை மோதல்: ஒருவர் உயிரிழப்பு (8.08 pm)
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதல் நிலைமை தற்போது ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை அலுவலகப் பகுதியில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் 4 கைதிகள் காயம் (6.40 pm)
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக மகர சிறைச்சாலைக்குள் அமைதியின்மை ஏற்பட்டது.
இந்த பதற்றநிலை காரணமாக 5 கைதிகள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேலதிக சிறைச்சாலை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.




