– மேலதிக விசாரணைகள் ஜூலை 09 இற்கு ஒத்திவைப்பு
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு (Writ Petition) இன்று (06) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இந்த மனுவை உயர்நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்துமாறு சட்ட மாஅதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு இன்று பரிசீலனைக்கு வந்தபோது, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் ஒரு முக்கிய சட்ட வாதத்தை முன்வைத்தார். மனுதாரரான கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ள நிவாரணங்கள் அடிப்படை உரிமைகளுடன் (Fundamental Rights) தொடர்புடையவை என்பதால், அவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் அடங்காது என அவர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாகவே, இந்த மனுவை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றும் கட்டளையை பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றைக் கேட்டுக்கொண்டார்.
வழக்கு விசாரணைகளின் போது, கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தனது வாய்மூல சமர்ப்பணங்களை நிறைவு செய்துள்ளார்.
இதனையடுத்து, சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் கோரிக்கை மற்றும் மேலதிக சமர்ப்பணங்களுக்காக குறித்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை 09 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.




