இ. போ. ச. வெற்றிடங்களை அமைச்சரவை அனுமதியுடன் நிரப்ப துரித நடவடிக்கை

1 Min Read

இலங்கை போக்குவரத்துச் சபையில் தற்போது நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது 647 சாரதிகள், 770 நடத்துனர்கள், 429 தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் 59 பணிமனை மேற்பார்வையாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், அவற்றை நிரப்புவதற்குத் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. கிங்ஸ் நெல்சன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை போக்குவரத்துச் சபையின் சில டிப்போக்கள் நஷ்டமடைவதற்கு அவை பிரதேச ரீதியில் அமைந்திருப்பதும், அவ்வீதிகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதுமே காரணமாகும். இதற்காக முறையான நடைமுறையொன்றைப் பின்பற்றுவதற்குத் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இ.போ.ச.விடம் காணப்படும் பஸ்களில் நிலவும் குறைபாடுகள் காரணமாக, அவற்றை நிரந்தரமாகப் பழுதுபார்க்க வேண்டியுள்ளதால் அதற்காக அதிக செலவு ஏற்படுவதும் இ.போ.ச.விற்கான பெரும் நட்டத்திற்கு காரணமாகின்றது.

அதேபோன்று, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி நிலைவரப்படி இலங்கை போக்குவரத்துச் சபையில் காணப்பட்ட ஊழியர்கள் வெற்றிடங்களுக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களை இணைத்துக் கொள்ள முடிந்துள்ளது. 2026.01.31 ஆம் திகதி நிலைவரப்படி 1,034 சாரதிகள், 1,022 நடத்துனர்கள், 429 தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் 59 பணிமனை மேற்பார்வையாளர்கள் என வெற்றிடங்கள் காணப்பட்ட போதிலும், கடந்த 10 ஆம் திகதி அந்த வெற்றிடங்களில் ஒரு பகுதி நிரப்பப்பட்டுள்ளது.

அதற்கமைய, தற்போது நிலவும் ஊழியர்கள் வெற்றிடங்களாக 647 சாரதிகள், 770 நடத்துநர்கள், 429 தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் 59 பணிமனை மேற்பார்வையாளர்கள் மட்டுமே காணப்படுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *