மேற்திந்திய தீவுகள் வளர்ந்து வரும் அணிக்கு எதிரான முதலாவது நான்கு நாள் போட்டியில் முதல் இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடும் இலங்கை வளர்ந்து வரும் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது 8 விக்கெட் இழப்புக்கு 302 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச அரங்கில் நேற்று (08) ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை வளர்ந்து வரும் அணி 26 ஓட்டங்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. எனினும் மத்திய வரிசையில் வந்த அஜந்த பண்டார இலங்கை அணியை ஸ்திரமான நிலைக்கு இட்டுச் சென்றார்.
முதல் நாள் ஆட்ட நேரம் முடியும் வரை களத்தில் இருந்த அவர் 165 பந்துகளில் 13 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 126 ஓட்டங்களைப் பெற்றார். குறிப்பாக பண்டார 9 ஆவது விக்கெட்டுக்கு பின்வரிசை வீரர் நிசல அபேரத்னவுடன் இணைந்து பிரிக்கப்படாத இணைப்பாட்டாக 109 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார். அபேரத்ன 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார்.
இலங்கை வளர்ந்து வரும் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 77 ஒவர்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றது.



