தொழிலிட வன்முறைகளுக்கு எதிரான ‘C190’ உடன்படிக்கையை அங்கீகரித்தது இலங்கை

1 Min Read

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் 2026 ஜூன் 01 முதல் 12 ஆம் திகதி வரை நடைபெற்று வரும் 114ஆவது சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் ஓரங்கமாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கில்பர்ட் எப். ஹூங்க்போவை பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த மரியாதை நிமித்தமாக நேற்று (08) சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது, அமைச்சர் நாட்டில் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள், சீர்திருத்தங்கள் மற்றும் முயற்சிகள் குறித்து அவருக்கு விளக்கமளித்ததுடன், இவ்விடயங்களில் ILO-வின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் கோரினார்.

மேலும், தொழிலிடங்களில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ILO-வின் “C190: Violence and Harassment in the World of Work” உடன்படிக்கையை இலங்கை அண்மையில் அங்கீகரித்துள்ளதையும், அதனை நடைமுறைப்படுத்த தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள எமது அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், மீன்பிடித் துறையில் கண்ணியமான மற்றும் பாதுகாப்பான தொழில் சூழலை உறுதிப்படுத்தும் நோக்கில் ILO-வின் “C188: Work in Fishing” உடன்படிக்கையை அங்கீகரிக்கும் சாத்தியக்கூறுகளையும் இலங்கை ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டார்.

மேலும், நாட்டின் தொழிலாளர் சமூகத்திற்காக கண்ணியமான வேலைவாய்ப்புகளையும் சிறந்த பணிச்சூழலையும் உருவாக்குவதில் இலங்கை அரசாங்கம் உறுதியான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும், இந்த முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த ஹூங்க்போ அவர்கள், இலங்கையின் உறுதியான அர்ப்பணிப்பையும் அண்மைய உடன்படிக்கை அங்கீகாரத்தையும் பாராட்டியதுடன், இத்துறைகளில் ILO தொடர்ந்தும் தொழில்நுட்ப உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என உறுதியளித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *