இலங்கையின் முதலாவது பிரான்சைஸ் அடிப்படையிலான பிக்கிள்போல் தொடரான ‘சிலோன் பிக்கிள்போல் லீக்’ எதிர்வரும் ஒக்டோபர் 16 தொடக்கம் 18 வரை கொழும்பு பிக்கிள்போல் கழகத்தில் நடைபெறவுள்ளது.
ஹவ்லொக் சிட்டி மோலில் அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த பிரான்சைஸ் போட்டி அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது தொழில்முறைப் போட்டி, பிரான்சைஸ் உரிமம், வீரர்களுக்கான ஏலம், நேரடி ஒளிபரப்பு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த விளையாட்டு அனுபவங்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்த ஒரு முழுமையான நவீன லீக் தொடராக அமையவுள்ளது.
கொழும்பு பிக்கிள்போல் கழகத்துடன் இணைந்து ‘இவென்டிஸ்ட்ரி ஸ்போர்ட்ஸ்’ நிறுவனம் இந்த லீக்கை உரிமையாக்கி, ஏற்பாடு செய்துள்ளது. இதன் அறிமுகப் பருவத்திற்கான அனைத்து 8 பிரான்சைஸ் அணிகளும் தொடக்கத்துக்கு முன்னரே முழுமையாக விற்பனையாகி, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.



