ஆர்சனல் அணியை இறுதிப் போட்டியில் பெனால்டி சூட் அவுட் முறையில் வீழ்த்திய பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பீஎஸ்ஜி) அணி அடுத்தடுத்து இரண்டாவது முறையாக சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றது.
ஹங்கேரி தலைநகர் புடபாஸ்டில் நேற்று முன்தினம் (30) நடைபெற்ற இறுதிப் போட்டியின் முழு நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலை பெற்ற நிலையில் முடிவை தீர்மானிப்பதற்கு பெனால்டி சூட் அவுட் முறை பயன்படுத்தப்பட்டது. இதில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் 4–3 என வெற்றியீட்டியது. இதன்படி 2016 தொடக்கம் 2018 வரை ரியல் மெட்ரிட் சம்பியன்ஸ் கிண்ணத்தை தொடர்ந்து மூன்று முறை வென்ற பின்னர் அதனை தொடர்ச்சியாக வெல்லும் முதல் அணியாக பிரான்ஸ் கழகமான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் பதிவாகியுள்ளது.
மறுபுறும் ஒரு வாரத்திற்கு முன்னர் 22 ஆண்டுகளின் பின்னர் முதல் முறை பிரீமியர் லீக் பட்டத்தை வென்ற ஆர்சனல், ஐரோப்பாவின் மிகப்பெரிய கிண்ணமான சம்பியன்ஸ் லீக்கை முதல்முறை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.



