டயமன்ட் லீக் போட்டியில் வெள்ளி வென்றார் தரங்க

1 Min Read

மொரோக்கோ டயமன்ட் லீக் தடகளப் போட்டியில் இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மொரோக்கோ தலைநகர் ரபாத்தில் நேற்று முன்தினம் (31) நடைபெற்ற போட்டியில் தரங்க தனது முதல் முயற்சியிலேயே 85.97 மீற்றர் தூரத்தை எறிந்து முன்னிலை பெற்றார். இருமுறை உலக சம்பியனான கிரனடாவின் அன்டர்சன் பீட்டர்ஸ் 86.08 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றதோடு முன்னாள் ஒலிம்பிக் மற்றும் உலக சம்பியனான டிரினிடாட்ட மற்றும் டொபாகோவைச் சேர்ந்த கேஷோன் வோல்கொட் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அவர் 82.52 மீற்றர் தூரத்தை எறிந்தார். உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற இந்தத் தொடரில் ருமேஷின் சாதனை குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. குறிப்பாக 90 மீற்றருக்கு மேல் எறியக் கூடிய வீரர்கள் முன்னிலையிலேயே அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதில் முன்னணி வீரர்களான ஜெர்மனியி தோமஸ் ரொஹ்லர் மற்றும் கென்யாவின் ஜூலியஸ் யேகோ ஆகியோர் முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களையே பிடித்தனர்.

டயமன்ட் லீக் போட்டி ஒன்றில் தரங்க பங்கேற்கும் முதல் சந்தர்ப்பமாக இது இருந்தது.

அடுத்த டயமன்ட் லீக் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (04) ருமேனியாவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியிலும் ருமேஷ் தரங்க பங்கேற்கவுள்ளார். இலங்கை நேரப்படி இரவு 10.40 மணிக்கே இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *