‘சிலோன் டீ’ கலாசாரத்தை உலக மரபுரிமையாக அங்கீகரிக்க யுனெஸ்கோவிடம் கோரிக்கை

1 Min Read

தேயிலை கைத்தொழிலை மேம்படுத்துவதற்காக அனைத்து உற்பத்தியாளர்கரளயும் உள்ளடக்கிய ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலை மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

நேற்று (31) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்ற, தேயிலை அறுவடையின் முதற்பலனை புனித சின்னத்திற்கு சமர்ப்பிக்கும் ” தேசிய தேயிலை திருவிழா” (தேமங்கள்ய) நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது-

எமது புதிய ஐந்தாண்டுத் திட்டத்தின் ஊடாக கடந்த ஆண்டில் 1.5 பில்லியன் டொலராக இருந்த தேயிலை வருமானத்தை 2030 ஆம் ஆண்டளவில் 2.5 பில்லியன் டொலராக உயர்த்த முடியும். இதுவே எமது இலக்காகும். அதாவது அடுத்த 5 ஆண்டுகளில் ஏற்றுமதி வருமானத்தை 1 பில்லியன் டொலரால் மேலும் அதிகரிக்க முடியும். அதாவது முன்னர் 264 மில்லியன் கி.கிராமாக இருந்த தேயிலை ஏற்றுமதியை, 2030 இற்குள் 400 மில்லியன் கி.கிராமாக உயர்த்துவதுவதன் ஊடாக இதனை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

தேயிலை என்பது வெறும் பானம் மட்டுமல்ல, அது ஒரு பெரிய கலாசாரம் பாரம் பரியத்தைக்கொண்டது. கண்டி, அநுராதபுரம், பொலன்னறுவை போன்ற நகரங்கள் உலக மரபுரிமைகளாக இருப்பது போல, இலங்கையின் தேயிலை கலாசாரத்தையும் உலக மரபுரிமையாக அங்கீகரிக்குமாறு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ தற்போது அதற்கு கொள்கை யளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“தூய தளிர் நடவடிக்கை” என்ற புதிய திட்டத்தின் கீழ் 500 ‘சிலோன் டீ’ (Ceylon Tea) கிராமங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 180,000 சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்காக ரூ. 2,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்க, கண்டி மேயர் சந்திரசிறி விஜேநாயக்க, அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, தேயிலை சபையின் தலைவர் ராஜ் ஒபேசேகர மற்றும் தேயிலை ஆணையாளர் எம்.கே. ஜயவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *