யுனெஸ்கோ நிறுவனம், கல்வி, உயர்கல்வி,தொழிற்கல்வி அமைச்சு மற்றும் தெற்காசிய ஆசிரியர் அபிவிருத்தி மையம் (SACTD) ஆகியவற்றுக்கிடையில், யுனெஸ்கோவின் (Category 02 Centre – C2C) எனும் அந்தஸ்தை SACTD நிறுவனத்திற்குப் புதுப்பிக்கும் நோக்கிலான முத்தரப்பு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு, இன்று (29) அலரி மாளிகையில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, ஆசிரியர் அபிவிருத்தித் துறைக்கு வாழ்நாள் முழுவதும் வழங்கிய சிறப்புமிக்க கல்விசார் பங்களிப்பையும், ஆராய்ச்சி மற்றும் அறிவுசார் தலைமைத்துவத்தில் ஆற்றிய முக்கிய பங்கையும் பாராட்டி, SACTD இன் முதலாவது “Teacher Development Endowed Chair” கௌரவிப்பு பேராசிரியர் லக்ஷ்மன் சமரநாயக்கவுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் வழங்கப்பட்டது.
அத்தோடு “SACTD: A Collaborative Regional Journey” எனும் நினைவுப் பதிப்பு Coffee Table Book, பிரதமருக்கும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளருக்கும் வழங்கப்பட்டது.
அதனை அடுத்து இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
ஆசிரியர் கல்வியையும் ஆசிரியர்களையும் பலப்படுத்துவது இன்றியமையாதது என்பதை வலியுறுத்தியதோடு, வேகமாக மாற்றமடைந்து வரும் தொழில்நுட்ப உலகின் தேவைகளுக்கு ஆசிரியர்கள் திறன்பட முகம் கொடுக்கக் கூடிய விதத்திலும், அவசியமான மாற்றங்களுக்குத் தங்களை தயார்படுத்திக்கொள்வதற்கும் தேவையான ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தெற்காசிய ஆசிரியர் அபிவிருத்தி மையம் (SACTD) போன்ற பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார். பிராந்திய நாடுகளுக்கிடையில் அர்த்தபுஷ்டியான கலந்துரையாடல்களை முன்னெடுத்து, ஒத்துழைப்பைப் பலப்படுத்தி, கல்வித்துறையில் ஏற்படுகின்ற சவால்களுக்குப் பொதுவான கொள்கை அணுகுமுறைகளை உருவாக்குவது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் (ஓய்வு) மேஜர் ஜெனரல் நய்யார் நசீர் (H.E. Major General (Retd.) Nayyar Naseer), பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐ.நா. தொடர்பான மேலதிக செயலாளர் மற்றும் தூதுவர் மனிஷா குணசேகர, SACTD பணிப்பாளர் நாயகம் கமல் பத்மசிறி, இராஜதந்திரப் பிரதிநிதிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- பிரதமர் ஊடகப் பிரிவு



