நெருக்கடிக்கு மேல் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இந்த உலகில் மனிதர்களுக்கு இடையில் நிலவ வேண்டிய பிணைப்பின் மகத்துவத்தை பற்றிய பரந்ததொரு முன்மாதிரியை ஹஜ் பெருநாள் வழங்குகின்றது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். உலக வாழ் முஸ்லிம்களால் இன்று கொண்டாடப்படும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்ததாவது,
“தனிப்பட்ட அந்தஸ்துகளுக்கு அப்பாற்பட்டு உலகின் நாலா திசைகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து மத வழிபாடுகளை நிறைவேற்றும் இச்சந்தர்ப்பமானது சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் குறித்த சிறந்த முன்மாதிரியை உலகுக்கு எடுத்துச் சொல்கிறது என்று நான் நம்புகிறேன்.
மேலும் மத்திய கிழக்கின் யுத்த சூழ்நிலை காரணமாக முழு உலகமும் எதிர்நோக்கியுள்ள கடினமான சவால்களுக்கு மத்தியிலும் மக்கா நகருக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லிம்கள் இப்ராஹீம் நபி அவர்கள் தனது வாழ்நாளில் செய்த எல்லை அற்ற தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறார்கள். சுயநலத்துக்கு பதிலாக பொதுநலம் மேலோங்கிய, அமைதியும் ஒற்றுமையும் நிறைந்த, ஒத்துணர்வுள்ள மனித சமூகத்தை கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அந்தப் பயணத்தில் அமைதி, சகோதரத்துவம் மற்றும் தியாகத்தை பிரதிபலிக்கும் ஹஜ்ஜுப் பெருநாளின் வழிகாட்டல்களை எமது வாழ்க்கைக்கு மென்மேலும் நெருக்கமாக்கிக் கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.
ஆன்மிக விழுமியங்களால் இலங்கை சமூகத்தை மேலும் போஷித்து, அனைவருக்கும் பயன் கிடைக்கக்கூடிய அபிவிருத்தி அடைந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக சகோதரத்துவத்துடன் முன்னோக்கிச் செல்லுமாறு சகலருக்கும் அழைப்பு விடுப்பதோடு, இந்நாட்டிலும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு இனிய ஈதுல்-அழ்ஹா பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். ஈத் முபாரக்… !” எனத் தெரிவித்தார்.



