அமைதியும் சகவாழ்வும் மிக்க சமூகத்தை கட்டியெழுப்ப உறுதி பூணுவோம்

1 Min Read

“குறுகிய வேறுபாடுகளை தவிர்த்து மற்றவர்கள் மீது கௌரவம் மற்றும் கருணையை வெளிப்படுத்தி, அமைதி மற்றும் சகவாழ்வுமிக்க சமூகத்தை கட்டியெழுப்ப நாம் அனைவரும் உறுதிபூண வேண்டும்” என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

முஸ்லிம்களால் கொண்டாடப்படும் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்தாவது,
“தியாகம், சகோதரத்துவம், கருணை ஆகிய உயரிய குணாம்சங்களை முன்னிலைப்படுத்தி உலகவாழ் இஸ்லாமிய மக்களால் மிகவும் பக்திபூர்வமாக கொண்டாடப்படும் ‘ஈதுல் அழ்ஹா’ ஹஜ்ஜூப் பெருநாளையிட்டு இலங்கை மற்றும் உலகவாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது அன்பார்ந்த, மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஹஜ்ஜூப் பெருநாளானது இப்றாஹீம் நபி அவர்கள் கொண்டிருந்த அளப்பரிய இறை பக்தியையும் உன்னத தியாகங்களையும் நினைவுகூரும் ஆழமான மத முக்கியத்துவம் மிக்கதொரு நாளாகும். தமக்கு சொந்தமான மிகவும் முக்கியமானதும் பெறுமதியானதுமானவற்றை கூட மனிதகுலத்தின் நன்மைக்காகவும் இறைவனின் விருப்பத்துக்காகவும் அர்ப்பணிக்கும் மனநிலையை இந்தத் திருநாள் உலகுக்கு எடுத்துரைக்கின்றது. இத்தகைய ஹஜ்ஜூப் பெருநாளில் நாம் அனைவரும் எமக்கு இடையிலான வேற்றுமைகளை கடந்து சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வைக் கடைப்பிடித்து ஒற்றுமையாக செயற்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும். தியாகத்தையும் கருணையையும் மையமாகக் கொண்ட ஹஜ்ஜூப் பெருநாளின் செய்தியானது பலமான, அமைதியான, அதேநேரத்தில் சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்பும் பயணத்துக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக அமைகின்றது. இந்த ஹஜ்ஜூப் பெருநாளானது உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி, சுபீட்சம், ஆசீர்வாதம் நிறைந்த நன்னாளாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *