தொலைபேசியை திருடியதாக முறைப்பாடு; பின்னணியில் ஓரினச்சேர்க்கை சம்பவம் அம்பலம்!

4 Min Read

ரூபா 10,000 தருவதாக கூறி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் நீண்ட காலமாக ஓரினச்சேர்க்கை ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் இடம்பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள் குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்றுள்ளனர். இரு சிறுவர்களையும் வரவேற்ற குறித்த வர்த்தகர் ஓரினச்சேர்க்கை செயற்பாட்டிற்காக ரூபா 10,000 தருவதாக பேரம் பேசியுள்ளார். பின்னர் சிறுவர்களில் ஒருவரை அச்செயற்பாட்டியில் ஈடுபடுத்தியுள்ளார். இதன்போது மற்றைய சிறுவன் அக்காட்சியை வர்த்தகரின் கைத்தொலைபேசியில் பதிவு செய்துள்ளான்.

ஆயினும் பேசியவாறு ரூ. 10,000 பணத்தை தராத காரணத்தினால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட காணொளியினை பதிவு செய்த வர்த்தகரின் கைத்தொலைபேசியினை இரு சிறுவர்களும் பலவந்தமாக எடுத்துச்சென்றுள்ளனர்.

அதன் பின்னர் பேசிய பணத்தை தராவிட்டால் சமூக அதனை அனைவருக்கும் பகிருவதாக குறிப்பிட்டுள்ளனர். ஆயினும் அதற்கு உடன்படாத காரணத்தினால் குறித்த வீடியோவை அவர்கள் பகிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சுதாரித்த குறித்த 56 வயது திருமணமான வர்த்தகர், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடந்த மே 06 ஆம் திகதி முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தார். தனது வர்த்தக நிலையத்திற்கு வருகை தந்த 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள் மேசையில் இருந்த விலையுயர்ந்த கைத்தொலைபேசியினை திருடிச் சென்றிருப்பதாக அம்முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

வர்த்தகரின் குறித்த முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை முன்னெடுத்திருந்த கல்முனை பொலிஸார், அம்பாறை புறநகர் பகுதியில் வைத்து இரு சிறுவர்களையும் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் வகையிலான இவ்விடயங்கள் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, கடந்த மே 21 ஆந் திகதி குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சிறுவர்கள் சார்பாக ஆஜரான எதிர்தரப்பு சட்டத்தரணிகள் குறித்த காணொளியை நீதிமன்றிற்கு சமர்ப்பித்துள்ளனர். அதனை வழக்கின் சான்றுப்பொருளாக எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதவான் கைதான பாதிக்கப்பட்ட சிறுவனை சட்ட வைத்திய அதிகாரியிடம் வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறும் பிரதான சந்தேகநபரான வர்த்தகரை கைது செய்யுமாறு கட்டளை பிறப்பித்ததுடன் குறித்த வழக்கினை ஒத்தி வைத்திருந்தார்.

இதன் போது பிரதான சந்தேகநபரான வர்த்தகர் மன்றில் முன்னிலையாகவில்லை என்பதோடு, குறித்த வழக்கும் நேற்று திங்கட்கிழமை (25) விசாரணைக்காக மறுதவணை இடப்பட்டிருந்தது.

அந்த வகையில் இவ்வழக்கு நேற்றையதினம் (25) கல்முனை நீதவான் கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, 4 நாட்களாக தலைமறைவாகி இருந்த வர்த்தகர் 5 சட்டத்தரணிகளுடன் மன்றில் சரணடைந்திருந்தார்.

சந்தேகநபர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதோடு, பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, வாக்கு மூலம் பதியப்பட்டு மீண்டும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சந்தேகநபரான வர்த்தகரை ஜூன் 08 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

இவ்விடயம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1929 இலங்கை சிறுவர் உதவித் தொலைபேசிச் சேவை

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் 14(ஓ) முறைப்பாடுகளை பொறுப்பேற்றுக் கொள்ளல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் அவற்றை முறையான அதிகாரியிடம் சமர்ப்பிப்பதன் அடிப்படையில் இப்பிரிவு தாபிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இப்பிரிவினால் தொலைபேசி ஊடாகக் கிடைக்கின்ற சகல அழைப்புக்கள் தொடர்பிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அழைப்புக்களை மேற்கொள்ள முடியும். அவ்வாறே இச்சேவை 24 மணி நேரமும் 365 நாட்களிலும் இயங்கிவருவதுடன், சகல தொலைபேசி அழைப்புக் கட்டணங்களிலிருந்தும் விடுதலை அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தொலைபேசி சேவைக்கு 18 வயதுக்குக் குறைவான எந்தவொரு பிள்ளை தொடர்பிலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றிய முறைப்பாடுகள் அல்லது தகவல்களை எந்தவொரு பிள்ளையோ, பெற்றோரோ, பாதுகாவலரோ அல்லது எந்தவொரு நபரும் வழங்க முடியும்.

 

அத்துடன் சிறுவர்கள் பற்றிய ஆலோசனைகள், உளவியல் சமூக ஆலோசனை அல்லது உளவியல் ஆலோசனை சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் ஆற்றலும் உள்ளது. இதன் போது தகவல்களை வழங்கும் எந்தவொரு நபருக்கும் பாதுகாப்பு உண்டு. மேலும் குறித்த தகவல்களின் இரகசியத்தன்மையை பாதுகாக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கட்டுப்பட்டுள்ளது.

இந்தத் தொலைபேசிச் சேவை ஊடாக தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தவறுகள், சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்தும் சட்டத்தின் கீழான தவறுகள், சிறுவர் மற்றும் இளைஞர் கட்டளைச் சட்டத்தின் கீழான தவறுகள், கட்டாயக் கல்வி பற்றிய சட்டத்தின் கீழான தவறுகள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற எந்தவொரு துன்புறுத்தல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களையும் சமர்ப்பிக்க முடியும்.

யாதாயினுமொரு ஆலோசனை சேவை மற்றும் சட்ட ஆலோசனை அவசியமெனின் அதிகாரசபையின் சட்டப் பிரிவு அல்லது உளவியல் சமூக பிரிவை தொடர்புபடுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *