– மத்திய வங்கி எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இலங்கை மத்திய வங்கி தங்கத்தால் பிணையுறுதியளிக்கப்பட்ட கடன்களுக்கான பெறுமதிக்கான கடன் விகித உச்சமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதோடு, மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கொடுகடன்களுக்கான, அதன் பெறுமதியின் அடிப்படையிலான கடன் விகிதங்களையும் இறுக்கமாக்கியுள்ளது.
இன்று (25) முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுகைச் சபையானது தங்கத்தால் பிணையுறுதியளிக்கப்பட்ட கொடுகடன் வசதிகளுக்கு பெறுமதிக்கான கடன் உச்சமொன்றை அறிமுகப்படுத்தவும் மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கொடுகடன் வசதிகளுக்கு பெறுமதிக்கான கடன் உச்ச வரம்புகளை இறுக்கப்படுத்தவும் தீர்மானித்ள்ளது.
விவேகமான கடன் வழங்கும் நடைமுறைகளை ஊக்குவிக்கவும், நிதி நிறுவனங்களின் மீள்திறனைப் பாதுகாக்கவும், மற்றும் அமைப்பு ரீதியான பாதிப்புகள் உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகளைத் தணிக்கவும், இலங்கை மத்திய வங்கியானது தனது பேரண்ட முன்னெச்சரிக்கை அதிகாரத்திற்கு இணங்க இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்த தீர்மானங்களை மேற்கொள்ளும்போது தங்க பிணையுறுதியளிக்கப்பட்டு வழங்கப்பட்ட கடன் வசதிகள் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கு நிதியிடல் தொடர்பான கடன் வசதிகளில் அண்மையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வகையிலான அதிகரிப்பையும், இத்தகைய போக்குகள் தற்போதைய கதியிலேயே தொடருமானால் நிதியியல் முறைமையின் மீது ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்களையும் ஆளுகைச் சபை கருத்தில் கொண்டது.
மாற்றமடையும் புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதார நிகழ்வுகளால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்றதன்மையின் அதிகரிப்புகளுடன் அண்மைய நாணயமாற்று செலாவணி வீத ஏற்றத்தாழ்வுகளும், தங்கம் உள்ளிட்ட சொத்து விலைகளில் தளம்பல்களை அதிகப்படுத்தியுள்ளன.
அண்மையில் வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள மேலதிக கட்டணத்தில் ஏற்பட்டுள்ள தற்காலிக அதிகரிப்பும், செலாவணி வீத மாற்றங்களும், வாகன விலைகளை தற்காலிகமாக அதிகரிக்கும் நிலை ஏற்படக்கூடியதாகவுள்ளது.
இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் பிணையுறுதிகளின் மதிப்பீடுகளை பாதிக்கலாம் என்பதுடன், கொடுகடன்; இடர்நேர்வு நிலைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வேளையில், தொடர்ந்து வேகமாக அதிகரித்து வரும் கடன் விரிவாக்கமானது, நிதியியல் முறைமையில் மிதமிஞ்சிய இடர்கள் உருவாகும் சாத்தியப்பாட்டினை தடுப்பதற்கான தலையீட்டினை தேவைப்படுத்தியுள்ளது.
அதற்கமைய, அனுமதிப்பத்திரம் கொண்டுள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும், அமுலுக்கு வரும் திகதியில் அல்லது அதற்குப் பின்னர் புதுப்பிக்கப்படும் தற்போதைய கடன் வசதிகள் உட்பட, தங்கத்தால் பிணையுறுதியளிக்கப்பட்ட கடன் வசதிகளுக்கு, பெறுமதிக்கான கடன் வீத உச்சம் 70% ஆக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மோட்டார் வாகனங்கள் தொடர்பாக வழங்கப்படும் கடன் வசதிகளுக்குப் பொருந்தக்கூடிய தற்போதைய பெறுமதிக்கான கடன் உச்ச வரம்புகள் 10% இனால் மேலும் இறுக்கப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய வணிக வாகன கொள்வனவிற்கு வழங்கப்படும் அதன் பெறுமதியின் அடிப்படையிலான கடன் 70% இலிருந்து 60% ஆக குறைக்கப்பட்டுள்ளன.
கார், SUV, வேன், முச்சக்கரவண்டி உள்ளிட்ட ஏனைய வாகனங்களை கொள்வனவிற்கு வழங்கப்படும் அதன் பெறுமதியின் அடிப்படையிலான கடன் 50% இலிருந்து 40% ஆக குறைக்கப்பட்டுள்ளன.



