திமுக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ரஜினிகாந் தான் காரணம் என தகவல் பரவிய நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் உடகவியலாளர் சந்திப்பில், நடிகர் ரஜனிகாந் கலந்து கொண்டு விளக்கமளித்தார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :
தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்னைப் பற்றி சில விமர்சனங்கள் எழுந்தன. அது தொடர்பாக ஊடகத்தினரை சந்தித்து விளக்கம் தர வேண்டும் என கருதினேன். அதற்காக உங்கள் எல்லோரையும் இப்போது சந்தித்துள்ளேன்.தேர்தல் முடிவுகள் வந்தவுடன் நான் ஸ்டாலினை சந்தித்தேன். அது கொஞ்சம் விமர்சனத்துக்கு உள்ளானது. ஸ்டாலினுக்கும் எனக்கும் இடையிலான நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. அவர் எனது நீண்ட கால நண்பர். ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி என்பது சகஜம். இருந்தாலும் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி அடைந்தது எனக்கு சங்கடமாக இருந்தது. அதனால் நண்பர் என்ற முறையில் அவரைச் சென்று பார்த்தேன். ’தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மு.க. ஸ்டாலினை சந்தித்ததைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. நான் பதிலளிக்காமல் இருந்தால் அது உண்மையாகி விடும். மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்றது எனக்கு வருத்தமாக இருந்தது. அரசியலுக்கு அப்பாற்பட்டு அவருக்கும் எனக்கு 38-40 ஆண்டுகால நட்பு உள்ளது. அவரை நட்பு ரீதியாகவே சந்தித்தேன். விஜய் முதல்வர் ஆவதைத் தடுக்க ரஜினி முயன்றார். இரு பெரிய கட்சிகள் கூட்டணிக்கு பேசினார் என்றெல்லாம் விமர்சிக்கிறார்கள். அப்படி பேசக்கூடிய தரம்கெட்ட ஆள் இந்த ரஜினிகாந்த் இல்லை. விஜய் முதல்வர் ஆகக்கூடாது, அதிகாரத்துக்கு வரக்கூடாது, அதை தடுக்கவே நான் அங்கு சென்றுள்ளேன் என்றும், இரண்டு பெரிய கட்சிகள் இணைய வேண்டும் என பேசப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. அந்தச் சூழலில் அதெல்லாம் பேச முடியாது. அப்படி தரம் தாழ்ந்து பேசக்கூடிய நபர் ரஜினிகாந்த் அல்ல.
நான் அரசியலில் இல்லை. அப்படி இல்லாத சூழலில் அவர் மீது எனக்கு ஏன் பொறாமை வரப்போகிறது.
விஜய் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் மக்கள் வாக்களித்துள்ளனர். அந்த எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உண்டு. அதற்கு எனது வாழ்த்துகள்.



