இலங்கையின் நகரப் பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் திறன்மிக்கதாகவும், சீரமைக்கப்பட்டதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ‘லங்கா மெட்ரோ டிரான்சிட்’ பேருந்து சேவைக்காக 104 புதிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கான உத்தியோகப்பூர்வ ஒப்பந்தங்கள் இன்று (18) கையெழுத்தாயின.
இந்த ஒப்பந்தம், பத்தரமுல்லை, கொஸ்வத்தவில் உள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் வளாகத்தில் கையெழுத்தானது.
அமைச்சுக்கு இந்திரா டிரேடர்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தப் பரிமாற்றம்…
இந்தத் தொகுதி பஸ்கள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நேரடி வழிகாட்டுதலின் கீழ், இலங்கை போக்குவரத்துச் சபையின் துணை நிறுவனமான ‘லங்கா மெட்ரோ டிரான்சிட்’ நிறுவனத்திற்காக இந்தக் கொள்வனவு மேற்கொள்ளப்படுகின்றன.
ஒப்பந்தத்தில், அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில சி. கே. பெரேராவும் , பஸ்களைவழங்கும் இந்திரா டிரேடர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் சார்பாக அதன் இயக்குநர்கள் குழுவும் கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தத்தின்படி, இந்த 104 நவீன பஸ்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதிக்குள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட உள்ளது. தற்சமயம் மேல் மாகாணத்தை மையப்படுத்தி கடவத்தை மற்றும் ரத்மலானை போன்ற பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய மெட்ரோ சேவை முற்றத்துடன் ஓகஸ்ட் மாதம் இந்தப் பஸ்களையும் சேவையில் இணைப்பதன் மூலம், நாட்டின் பொதுப் போக்குவரத்தில் ஒரு தரமான திருப்புமுனையை உருவாக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இந்த உத்தியோகபூர்வ ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்ட நிகழ்வில், லங்கா மெட்ரோ டிரான்சிட் லிமிடெட்டின் தலைவர் திலகரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி பொறியாளர் பி. எம். பியதிலக்க மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



