– குடும்ப அரவணைப்பு குறைவது பிரதான காரணம்
– கையடக்கத் தொலைபேசி பாவனையில் அவதானம் அவசியம்
இலங்கையில் இளம் வயதிலேயே சிறுமிகள் கப்பிணிகளாக மாறும் நிலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இது ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இந்த ஊடக அறிக்கையின்படி, இவ்வாறான துரதிர்ஷ்டவசமான நிலைகள் ஏற்படுவதற்கு ‘குடும்பத்திலிருந்து குறைந்து வரும் அன்பும் பாசமுமே’ முக்கிய காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெற்றோரின் அதிகப்படியான வேலைப்பளு காரணமாக, அவர்கள் தமது பிள்ளைகளின் நாளாந்த வாழ்க்கை, விருப்பு, வெறுப்புகள் குறித்துக் கவனம் செலுத்தத் தவறுவதால், பிள்ளைகள் தமக்குக் கிடைக்காத அன்பையும் அரவணைப்பையும் வெளிநபர்களிடமிருந்து எதிர்பார்க்கத் தொடங்குகின்றனர்.
இவ்வாறான சூழலில், சிறுமிகள் தேவையற்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுவதாகப் பொலிஸ் நிலையங்களுக்குக் கிடைக்கும் முறைப்பாடுகள் மூலம் அவதானிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய கர்ப்பங்களினால் சிறுமிகளின் கல்வி பாதிக்கப்படுவதோடு, அவர்களின் எதிர்காலக் கனவுகளும் குழந்தைப் பருவமும் சிதைந்து போகின்றன.
பெற்றோரிடமிருந்து மனதளவில் விலகும் சிறுமிகள், தமது சிறந்த நண்பனாக கையடக்கத் தொலைபேசிகளைத் தேர்ந்தெடுப்பதாகப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
எனவே, பிள்ளைகளைப் பாதுகாப்பதற்குப் பெற்றோர்கள் பின்வரும் விடயங்களில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
* சிறுமிகள் தமது பிரச்சினைகளைப் பயமின்றிப் பெற்றோரிடம் பகிரக்கூடிய நட்பான சூழலை உருவாக்குதல்.
* பிள்ளைகளுக்குத் தேவையான அன்பு, பாசம் மற்றும் கருணையைத் தடையின்றி வழங்குதல்.
* பிள்ளைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது, அவர்கள் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து கண்காணித்தல்.
* பிள்ளைகளின் நடத்தையில் திடீர் மாற்றங்கள், கல்வியில் ஆர்வக்குறைவு, எப்போதும் தொலைபேசியுடன் தனிமையில் இருப்பது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அது குறித்து உடனடியாக அவர்களுடன் உரையாடுதல்.
அதேவேளை, சிறுமிகளும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, Facebook, Instagram, WhatsApp மூலம் அறிமுகமாகும் அந்நிய நபர்களை நம்ப வேண்டாம் என்றும், தமது தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமக்கு ஏதேனும் அச்சுறுத்தல், தொந்தரவு அல்லது பயம் ஏற்பட்டால், அதனை மறைக்காமல் உடனடியாகப் பெற்றோரிடமோ, ஆசிரியர்களிடமோ அல்லது நம்பகமான பெரியவர்களிடமோ தெரிவிக்க வேண்டும். மேலதிகமாக, ஏதேனும் ஆபத்துகள் அல்லது துஷ்பிரயோகங்கள் குறித்துத் தகவல் வழங்க விரும்புவோர் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 119, 118, 109, 107 ஆகிய அவசர பொலிஸ் தொலைபேசி எண்களுக்கோ தொடர்புகொள்ள முடியும்.



