இலங்கைக்கும் – பெலாறூஸ் குடியரசுக்கும் இடையில் 3 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நேற்று முன்தினம் (12) தொடக்கம் நாளை (15) வரை 3 நாள் பெலாறூஸ் குடியரசுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

இருநாடுகளுக்கிடையில் ஒத்துழைப்புக்களை மேலும் அதிகரித்து விமான சேவைகள், உயர்கல்வி மற்றும் சுகாதாரத் துறைகயை உள்ளடக்கியவாறு குறித்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கீழ்வரும் ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
• இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் பெலாறூஸ் குடியரசுக்கும் இடையிலான விமான சேவைகள் ஒப்பந்தம்
• இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கும் பெலாறூஸ் குடியரசின் கல்வி அமைச்சுக்கும் இடையிலான கல்வித்துறை ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்
• இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கும் பெலாறூஸ் குடியரசின் சுகாதார சேவைகள் அமைச்சுக்கும் இடையிலான கல்வித்துறை ஒத்துழைப்புக்களை மேம்படுத்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்றன கைச்சாத்திடப்பட்டுள்ளன.



