நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.
ஐபிஎல் இறுதிச் சுற்று போட்டிகளுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு நேற்று (06) வெளியிடப்பட்டது. இதன்படி விறுவிறுப்பான 70 லீக் போட்டிகளுக்குப் பின்னர், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மோதும் ‘குவாலிஃபையர் 1’ போட்டி மே 26ஆம் திகதி தர்மசாலாவில் நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இடையிலான ‘எலிமினேட்டர்’ போட்டி மே 27ஆம் திகதியும், அதில் வெற்றி பெறும் அணி குவாலிஃபையர் 1-இல் தோல்வியடைந்த அணியுடன் மோதும் ‘குவாலிஃபையர் 2’ போட்டி மே 29ஆம் திகதியும் சண்டிகரில் உள்ள புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
இந்த ஆண்டின் இறுதிப் போட்டி மே 31ஆம் திகதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக, பெங்களூருவில் இறுதிப்போட்டியை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், உள்ளூர் சங்கம் மற்றும் அதிகாரிகளின் சில கோரிக்கைகள் இந்திய சபையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அமையாத காரணத்தால், ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இறுதிப்போட்டி அஹமதாபாத்திற்கு மாற்றப்பட்டதாக இந்திய சபை தெரிவித்துள்ளது.



