இலங்கை, இங்கிலாந்துடன் முக்கோண ஒருநாள் தொடரில் ஆட பாக். ஏற்பாடு

1 Min Read

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் முக்கோண ஒருநாள் தொடர் ஒன்றை நடத்துவதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டின் ஜியோ நியூஸ் செய்தித் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் மீண்டும் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகளைக் கொண்டுவரும் முயற்சியாகவே இந்தத் தொடரை நடத்த ஏற்பாடாகியுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்படிருப்பதாகவும் அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது.

இதற்கு இங்கிலாந்து தமது விருப்பத்தை வெளியிட்டிருந்தபோதும், இலங்கை இன்னும் இந்தத் தொடரில் பங்கேற்பதை உறுதி செய்யவில்லை என்றே அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது. இலங்கை அணி எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதற்காக பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதில் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் ஒக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ளதோடு, இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பரில் நடைபெறவுள்ளது. இதனாலேயே இந்தக் காலப் பகுதியில் முக்கோண ஒருநாள் தொடர் ஒன்றை பாகிஸ்தான் நடத்த திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்கு தயாராகும் வகையிலேயே இந்தத் தொடரை நடத்த ஏற்பாடாகியுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் வகையில் கடந்த ஆண்டு பிற்பகுதியில் பாகிஸ்தான், இலங்கை மற்றும் சிம்பாப்வே உடன் இணைந்து முக்கோண டி20 தொடர் ஒன்றை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *