திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மற்றொரு கணக்கிற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து எதிர்க்கட்சி கோரியுள்ள பாராளுமன்ற விவாதத்திற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
சபாநாயகர் டி.ஆர். ஜகத் விக்ரமரத்ன நேற்று (30) கண்டியில் ஊடகவியராளர்கள் மத்தியில், இதனை உறுதிப்படுத்தினார். ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையில் பாராளுமன்றம் நிறுவப்பட்டதன் 44வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் புனித தலதா மாளிகையில் மத நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்தபோதே,சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது; எதிர்வரும் 05 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரின் போது பல மசோதாக்கள் நிறைவேற்றப்படவுள்ளன.இதுதவிர, 08 ஆம் திகதி வியட்நாம் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றவுமுள்ளார்.இதனால், இந்த விசேட விவாதத்தை மே 19ஆம் திகதி ஆரம்பமாகும் பாராளுமன்ற அமர்வு வாரத்தில் நடத்துவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.



