உழைக்கும் மக்களின் மதிப்பைச் சரியாகப் புரிந்து கொண்டு, அரசாங்கம் கொள்கைகளை வகுத்து வருவதாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தொழிலாளர் தினத்தை வாழ்த்தி அவர் வௌியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தொழிலாளர்கள் நலன்களை மேம்படுத்துவதில் எமது அரசாங்கம் பலவற்றை செய்துள்ளது.அரச மற்றும் தனியார்துயை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம்.2016 ஜனவரி 01 ஆம் திகதிக்குப் பின்னர் பணியில் இணைந்த அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் இரவு நேரப் பணியில் ஈடுபடுவது தொடர்பான சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. உழைக்கும் மக்களின் பிள்ளைகளின் கல்விக்கான ‘மஹபொல’ புலமைப்பரிசில் கொடுப்பனவை 10,000 ரூபாவால் அதிகரித்துள்ளோம்.
விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் மட்டுமன்றி உற்பத்தியாளர்கள், சிறுதொழில் முயற்சியாளர்கள் எனச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்குமான பல சலுகைகளை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் தீர்மானமிக்கதொரு தருணத்தில், இலங்கையின் உழைக்கும் மக்கள் இம்முறை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றனர்.அமெரிக்க தீர்வை வரி விதிப்பு, ‘டித்வா’ சூறாவளி, மத்திய கிழக்கு போர் போன்ற அண்மைக்காலப் பெரும் சவால்களுக்கு மத்தியிலும், எமது நாட்டின் தனித்துவமான மனிதாபிமானமிக்க அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையின் ஊடாக வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களின் துயரங்கள் மற்றும் கண்ணீருக்குப் பதிலாக ஒரு பாதுகாப்பான பொருளாதாரத்தையும் பிள்ளைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தையும் கட்டியெழுப்புவதே எமது ஒரே நோக்கமாகும். இதற்காக நாளுக்கு நாள் நவீனமடையும் உற்பத்தி சக்திகள் மற்றும் வளர்ந்து வரும் சூழலுக்கு ஏற்ப மனித வளம், பொருளாதாரம் மற்றும் உற்பத்தி தொடர்புகளை மேம்படுத்துவதை முதன்மைப் பணியாக நாம் அடையாளம் கண்டுள்ளோம். சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்குச் சகோதரத்துவத்துடன் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.



