மேற்கிந்திய தீவுகள் உள்ளூர் போட்டி ஒன்றில் ஜெரமிய லுவிஸின் தலைக் கவசத்தில் பந்து தாக்கியதை அடுத்து அபாயகரமான ஆடுகளம் காரணமாக அந்தப் போட்டி கைவிடப்பட்டுள்ளது.
அன்டிகுவாவில் உள்ள சேர் விவியன் ரிச்சட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற லீவார்ட் தீவுகளுக்கு எதிரான டிரினிடாட் அன்ட் டொபாகோ அணியுடனான போட்டியே கடந்த செவ்வாயன்று (21) இவ்வாறு கைவிடப்பட்டது. மூன்றாவது நாள் போட்டி ஆரம்பித்த காலையிலேயே வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் வீசிய பந்து அபாயகரமான முறையில் மேலெழுந்து லுவிஸை தாக்கியது. இதனை அடுத்து அவர் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்தப் போட்டியில் வீசப்பட்ட முதல் 147 ஓவர்களில் மொத்தம் 27 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘ஆடுகளம், முன்கூட்டியே கணிக்க முடியாததாகவும் ஒழுங்கற்ற நடத்தையை வெளியிப்படுத்தியதாகவும் இருந்ததோடு வீரர்களின் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சேர் விவியன் ரிச்சட்ஸ் மைதானத்தில் சர்வதேச போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



