தனஞ்சயவின் தம்புள்ளைக்கு இன்னிங்ஸால் இலகு வெற்றி

1 Min Read

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் தேசிய சுப்பர் லீக் நான்கு நாள் போட்டியில் காலி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனஞ்சய டி சில்வா தலைமையிலான தம்புள்ளை அணி இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. கொழும்பு மற்றும் கண்டி அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிவுற்றது.

கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நான்காவது மற்றும் கடைசி தினமான நேற்று (22) இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்கு 233 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த காலி அணி 199 ஓட்டங்களுக்கு சுருண்டது. தனித்து போராடிய அணித் தலைவர் சதீர சமரவிக்ரம 74 ஓட்டங்களை பெற்றார்.

தம்புள்ளை அணி சார்பில் அகில தனஞ்சய 4 விக்கெட்டுகளை விழ்த்தியதோடு விஷ்வ பெர்னாண்டோ, கவிந்து பத்திரண மற்றும் ஷக்தி உதார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தப் போட்டியில் காலி அணி முதல் இன்னிங்ஸில் 255 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தம்புள்ளை தனது முதல் இன்னிங்ஸுக்காக 488 ஓட்டங்களை குவித்தது.

இதேவேளை தம்புள்ளையில் நடைபெற்ற கொழும்பும் மற்றும் கண்டி அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரு அணிகளும் துடுப்பாட்டத்தில் சோபித்த நிலையில் வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *