“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட பஸ் சேவை ஆரம்பம்

2 Min Read

இலங்கை பொதுப் போக்குவரத்துச் சேவையில் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், “எதிர்காலத்திற்கு அடிவைப்போம்” எனும் தொனிப்பொருளில் “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய திட்டம் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு இணைந்து முன்னெடுக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோருக்காக வடிவமைக்கப்பட்ட “தாழ்தள” (Low Floor) பஸ் சேவை இன்று (21) மாகும்புர போக்குவரத்து மையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பயணிகள் பஸ் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளக்கூடிய “LMT GO” எனும் கைபேசி செயலியும் (Application) இதன் போது அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இத்திட்டம் நாட்டின் போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்கதொரு முன்னெடுப்பு என்று குறிப்பிட்டார்.

சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர், பார்வைக் குறைபாடுள்ளோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதேவேளை, ஏனைய பயணிகளுக்கும் இது வசதியான பயணத்தை உறுதி செய்யும் என அவர் தெரிவித்தார். இவ்வருட இறுதிக்குள் இவ்வாறான 122 பஸ்கள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், கொழும்புக்கு வெளியே கண்டி, மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

போக்குவரத்து என்பது ஒரு பொறுப்புவாய்ந்த தொழில்துறை என்றும், இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தனது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளி சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இங்கு உரையாற்றிய லசங்க ரத்நாயக்க , பொதுப் போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்தும் போது அதிகளவில் சிரமங்களுக்கு உள்ளாகும் தரப்பினர் மாற்றுத்திறனாளிகளே எனச் சுட்டிக்காட்டினார். இந்தத் திட்டமானது அந்த சமூகத்திற்காக முன்னெடுக்கப்பட்ட மிகவும் பயனுள்ள மற்றும் ஆக்கபூர்வமான ஒரு செயலாகும் எனக் குறிப்பிட்ட அவர், இதற்காக அரசாங்கத்திற்குத் தனது நன்றியையும் தெரிவித்தார்.

சக்கர நாற்காலிகளுக்காக விசேட இடவசதிகள் ஒதுக்கப்பட்ட மற்றும் இலகுவாக ஏறுவதற்கு வசதியான தாழ்வான படிக்கட்டுகளைக் கொண்ட 30 ஆசனங்களைக் கொண்ட 10 பஸ்கள் இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.

மாகும்புரவிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும் மற்றும் மாகும்புரவிலிருந்து கடுவலை வரையிலும் பயணிக்கவுள்ள இந்தப் பஸ்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை போன்ற பிரதான சுகாதார மையங்களை உள்ளடக்கிய வகையில் இயங்கும்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, பாராளுமன்ற உறுப்பினர்களான சுகத் வசந்த டி சில்வா, தேவானந்த சுரவீர உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில சி.கே. பெரேரா, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (கிளீன் ஸ்ரீலங்கா) எஸ்.பி.சி. சுகீஷ்வர, இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன, அதன் பணிப்பாளர் நாயகங்களான டி.ஏ.டி. ரொட்ரிகோ மற்றும் விமல் எஸ்.கே. லியனகம ஆகியோருடன் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *