இந்திய துணை ஜனாதிபதி (குடியரசு துணைத் தலைவர்) சி.பி. ராதாகிருஷ்ணன், எதிர்வரும் ஏப்ரல் 19 – 20 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கொள்காட்டி, இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிவித்தலில் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ஒருவரினால் இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும் என்பது இப்பயணத்தின் மிக முக்கிய அம்சமாகும் என, குறித்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது இரண்டு நாள் பயணத்தின் போது, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஏனைய முக்கிய அரச பிரமுகர்களைச் சந்திப்பதுடன், இலங்கையிலுள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.
இந்தியாவின் ‘Neighbourhood First’ (அயல் நாட்டுக்கு முன்னுரிமை) கொள்கை மற்றும் ‘மகாசாகர்’ (MAHASAGAR) தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை ஒரு முக்கிய பங்காளியாகத் திகழ்வதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய உயர்மட்ட இராஜதந்திர ஈடுபாடுகளின் தொடர்ச்சியாக அமையும் இந்த விஜயம், இந்தியா மற்றும் இலங்கை இடையிலான ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கலாசார மற்றும் மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.




