நிலக்கரி டெண்டர் குரல் பதிவு: முஜிபுர் முறைப்பாடு; நிறுவனம் மறுப்பு – குரல் பதிவு திரிபுபடுத்தப்பட்டது: லங்கா நிலக்கரி நிறுவனம் மறுப்பு

1 Min Read

– ஜனாதிபதியின் விசுவாசிகளுக்கு முன்னுரிமை: எதிர்க்கட்சி சாடல்

இலங்கை நிலக்கரி விலைமனு (டெண்டர்) வழங்கலில் பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட குழுவினர் இன்று (13) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளனர்.

குறித்த நிலக்கரி டெண்டரை ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பான குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளதாகவும், அதில் ஊழல் நடந்திருப்பது தெளிவாகத் தெரிவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த குரல் பதிவில் ஜனாதிபதியின் பெயரும் அவருக்கு நெருக்கமான வர்த்தகர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதால், இது குறித்து உடனடியாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் இந்தத் தொலைபேசி உரையாடல் தொடர்பான குற்றச்சாட்டுகளை லங்கா நிலக்கரி நிறுவனத்தின் (Lanka Coal Company Pvt Ltd) தலைவர் ஜயந்த ரத்நாயக்க மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (13) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், கடந்த 2026 மார்ச் 25 ஆம் திகதி நிலக்கரி விநியோக நிறுவனத்தின் உள்நாட்டுப் பிரதிநிதியுடன் தான் மேற்கொண்ட உரையாடல் மாற்றியமைக்கப்பட்டு, பல்வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்படும் வகையில் தவறான நோக்கத்தில் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அங்கீகாரம் மற்றும் விலைமனு கோரல் சபையின் முறையான அனுமதியுடன் அவசர நிலக்கரி விநியோகத்திற்காக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட நிறுவனத்திடமிருந்து, வங்கி வழங்கிய ‘செயல்திறன் பிணைப்பத்திரத்தை’ (Performance Bond) அது வழங்கப்பட்ட திகதியிலேயே (2026 மார்ச் 25) சமர்ப்பிக்குமாறு தான் கோரியதாகவும், அந்த நடைமுறை ரீதியான அறிவுறுத்தலே தற்போது ஊழல் போன்று விபரிக்கப்படுவதாகவும் தலைவர் விளக்கியுள்ளார்.

அவசர நிலக்கரி விநியோகத்திற்கான கொள்முதல் நடைமுறைகள் அனைத்தும் சட்டபூர்வமாகவே முன்னெடுக்கப்படுவதாகவும், இந்தச் செயல்முறை வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

எனவே, பொதுமக்கள் இவ்வாறான தவறான பிரசாரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *