அறிவியலை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதன் மூலமே சுகாதாரக் கட்டமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையை பலப்படுத்த முடியும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். குறிப்பாக, அறிவியலின் பயன்கள் சமூகத்தின் கீழ்மட்ட மக்களையும் சென்றடைய வேண்டியது அரசின் முதன்மை இலக்கு என்றும் அவர் வலியுறுத்தினார்.

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் (WHO SEARO) தற்போதைய தலைவராகப் பணியாற்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, புதுடில்லியில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பின் புதிய தலைமையகத்தில் நேற்று முன்தினம் (07) நடைபெற்ற “2026 உலக சுகாதார தின” பிரதான விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மாநாட்டில் மேலும் உரையாற்றிய அமைச்சர், “இலங்கை நீண்டகாலமாக தரவுகளை அடிப்படையாகக் கொண்ட சுகாதாரக் கொள்கைகளையே பின்பற்றி வருகின்றது. தாய் – சேய் நலம் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் சர்வதேச மட்டத்தில் இலங்கை பெற்றுள்ள வெற்றிகளுக்கு, நமது பொதுச் சுகாதாரச் சேவை அறிவியல் ரீதியாகவும், சமத்துவமான அணுகுமுறையுடனும் இயங்குவதே காரணமாகும். வருங்கால சவால்களை எதிர்கொள்ள நவீன கண்டுபிடிப்புகளை உடனுக்குடன் செயற்திறன் மிக்க மக்கள் சேவையாக மாற்ற நாம் தயாராக வேண்டும் என்றார்.
இந்திய சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) இணைந்து “Together for Health: Stand with Science” எனும் கருப்பொருளின் கீழ் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
இதன் ஒரு அங்கமாக, பிராந்தியத்தின் சுகாதாரத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் ‘Banyan Framework for Health and Well-Being 2026–2028’ எனும் விசேட செயற்திட்டத்தை அமைச்சர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.
கடந்த 2025 டிசம்பரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்ட உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய புதிய தலைமையகத்தில் நடைபெற்ற முதலாவது சர்வதேச விழா இதுவாகும். உலக மக்கள் தொகையில் சுமார் 200 கோடி மக்களின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த உயரிய அமைப்பின் தலைமைத்துவத்தை இலங்கை வகிப்பது வரலாற்று முக்கியத்துவமிக்கதாகும்.
இந்நிகழ்வில் இந்திய சுகாதாரச் செயலாளர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா, உலக சுகாதார அமைப்பின் பிராந்திய பொறுப்பதிகாரி டொக்டர் கத்ரீனா போம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் சுகாதாரத் துறை உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.




