அனல் பறக்கும் தேர்தல் களம்: கரையேறுவாரா விஜய்?

5 Min Read

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தல் களம், கோடை வெயிலின் வெப்பத்தை விடக் கூடுதலாக அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இம்முறை ஜந்து முனைப் போட்டி நிலவும் சூழலில், நான்கு முக்கிய வேட்பாளர்கள் முதலமைச்சர் நாற்காலியைக் குறிவைத்து களத்தில் நிற்கின்றனர். மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, சீமான் மற்றும் நடிகர் விஜய் ஆகிய நால்வரும் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.கவினர், தாங்கள் மக்களுக்காகச் செய்த நலத்திட்டங்களை முன்வைத்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம், அ.தி.மு.கவின் எடப்பாடி பழனிசாமியும், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் நடிகர் விஜய்யும், தி.மு.க தனது ஆட்சியில் மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யவில்லை என்றும், வெறும் அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றிவிட்டது என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கம் போல அனைத்துத் தரப்பினரையும் விமர்சித்துத் தனது பாதையில் பயணிக்கிறார். சசிகலா மற்றும் இராமதாஸ் தலைமையில் அமைந்துள்ள ஐந்தாவது கூட்டணி இன்னும் முழுமையான பரப்புரையைத் தொடங்கவில்லை.

தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சியைக் கைப்பற்றுவார் என்ற கடுமையான போட்டி நிலவும் வேளையில், நடிகர் விஜய்க்கு ஒருமுறை வாய்ப்புக் கொடுக்கலாம், ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று ஒரு சாரார் விரும்புகின்றனர். ஆனால், “விஜய் ஆட்சிக்கு வந்தால் என்ன மாதிரியான மாற்றத்தைக் கொண்டு வருவார்?” என்ற கேள்விக்கு யாரிடமும் தெளிவான பதில் இல்லை. விஜய்யின் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளிலும் ஒருவித முரண்பாடு நீடிப்பதையே காண முடிகிறது.

முறையான அரசியல் கட்டமைப்பு இல்லாமலும், தெளிவான அரசியல் புரிதல் இல்லாமலும் பயணிக்கும் விஜய்யால் எவ்வாறு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்புகின்றனர். திரைப்படக் கவர்ச்சியை மட்டுமே வைத்துக்கொண்டு, தமக்கு பின்னால் ஓடும் கூட்டத்தை வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று கனவு காண்பது திரையில் வேண்டுமானால் நடக்கலாம்; ஆனால் உண்மை நிலவரம் அவ்வாறு இல்லை. தேர்தல் களத்தில் மக்கள் அனைவரும் விஜய்யை ஒரு தலைவராக ஏற்றுக்கொள்வார்களா என்பது கேள்விக்குறியே.

விஜய் பரப்புரைக்காக வெளியே வரும்போதெல்லாம் ஏதாவதொரு விபத்தோ அல்லது அசம்பாவிதமோ நடந்து கொண்டே இருக்கிறது. அரசியல் அறிவற்ற ரசிகர் கூட்டம், தங்களைக் கவர்ந்த நடிகரைத் தேடி வந்து விசிலடிப்பதும் ஆரவாரம் செய்வதும் ‘தற்குறித்தனமான செயல்’ என்று விமர்சிக்கப்பட்டாலும், அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. ஒரு தலைவனுக்குத் தன் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி வழிநடத்தத் தெரிந்திருக்க வேண்டும். அவர்களை வெறும் திரைப்பட ரசிகர்களாகவே வைத்திருப்பது அரசியல் பயணத்திற்குச் சரியான வழியல்ல.

மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் பல தொகுதிகளுக்கு நேரடியாகச் சென்று மக்களைச் சந்திக்கின்றனர்; தங்கள் வேட்பாளர்களை முறையாக அறிமுகப்படுத்துகின்றனர். அவர்களின் கூட்டங்களில் பெரும் திரளான மக்கள் கூடினாலும், அவை கட்டுக்கோப்புடன் நடத்தப்படுகின்றன. தொண்டர்கள் மத்தியில் சலசலப்போ, கூச்சல் குழப்பமோ இன்றி பரப்புரைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசியல்மயப்படுத்தப்பட்ட தொண்டர்கள் பலமாக இருப்பதால் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகள் தங்களின் தேர்தல் பயணத்தைத் திட்டமிட்டபடி தொடர்கின்றன.

இத்தகைய கட்டுக்கோப்பு தமிழக வெற்றிக் கழகத்தில் காணப்படவில்லை. விஜய் வெளியே வரும்போதெல்லாம், அவர் ஒரு நடிகர் என்ற ரீதியில் அவரை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காக வரும் கூட்டமே அதிகம். விஜய்யை நேரில் பார்த்துவிட்டால் அதுவே ஒரு வாழ்நாள் சாதனை என்ற மனநிலையில் வரும் கூட்டத்தினரிடம் அரசியல் தெளிவை எதிர்பார்க்க முடியாது. தமிழகத்தில் எத்தனை தொகுதிகள் இருக்கின்றன என்ற அடிப்படைத் தகவல்களைக் கூட தவெக தொண்டர்களால் சரியாகச் சொல்ல முடிவதில்லை. விஜய் முதலமைச்சரானால் என்ன செய்வார் எனக் கேட்டால், “ஏதாவது செய்வார்” என்று மழுப்பலாகப் பதில் தருகிறார்களே தவிர, திட்டவட்டமாக எதையும் கூற முடிவதில்லை.

தன்னுடைய நடிப்புத் தொழிலின் உச்சத்தில் இருந்தபோதே அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளதாக விஜய் அடிக்கடி கூறி வருகிறார். ஆனால், “அந்த உச்சத்தை விட்டுவிட்டு உங்களை யார் வரச் சொன்னது?” என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமெனில் அரசியலுக்கு வந்துதான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விஜய்யின் முக்கிய குறிக்கோள் முதலமைச்சர் பதவி என்பதுதான். ஆனால், அதற்கான அரசியல் கட்டமைப்பு மற்றும் முதிர்ச்சி தன்னிடம் இருக்கிறதா என்பதை அவர் யோசிக்கவில்லை.

இந்தத் தேர்தலில் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். மக்கள் ஆதரவு முழுமையாகத் தனக்கு இருப்பதாக நம்பினால், ஏன் இரண்டு தொகுதிகளில் நிற்க வேண்டும்? இது தோற்றுவிடுவோமோ என்ற பயத்தின் வெளிப்பாடா என்ற கேள்வியும் எழுகிறது. மேலும், தனது கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்து அறிமுகப்படுத்துகிறார். அந்தந்த தொகுதிகளுக்குச் சென்று வேட்பாளர்களை அறிமுகப்படுத்தாமல், விடுதிக்குள் வைத்து அறிமுகப்படுத்தினால் மக்கள் மத்தியில் அவர்களுக்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கும்?

விஜய் தான் போட்டியிடும் தொகுதிகளுக்கு எத்தனை முறை பரப்புரைக்கு வருவார் என்பதே தெரியாத நிலையில், அவர் வெற்றி பெற்றால் மக்களைச் சந்திப்பாரா அல்லது இணையம் வழியாகவே அரசியல் செய்வாரா என்ற ஐயம் மக்களிடம் உள்ளது. தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால் 100 சதவீதம் உண்மையாக இருப்பேன் என்று விஜய் கூறுகிறார். ஆனால், தனது குடும்பத்தினருக்கே உண்மையாக இருக்க முடியாத ஒருவரால், மக்களுக்கு எப்படி உண்மையாக இருக்க முடியும் என்ற விமர்சனத்தையும் ஒரு தரப்பினர் முன்வைக்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகால வரலாற்றில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளைத் தவிர வேறு யாராலும் ஆட்சி பிடத்தைப் பிடிக்க முடியவில்லை. விஜய் என்பவர் ஒரு நீர்க்குமிழி போல இந்தத் தேர்தலில் மட்டும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டு, மே 4 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மீண்டும் தனது நடிப்புத் தொழிலுக்கே சென்றுவிடுவார் என்றும், இவரால் பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடப் போவதில்லை என்றும் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

“கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்; மக்கள் என்னை வெற்றி பெற வைக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலகி மீண்டும் திரைப்படம் இயக்கச் சென்றுவிடுவேன்” என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தனது பரப்புரையில் புலம்பத் தொடங்கியுள்ளார். இதே நிலைமை விஜய்க்கும் வரலாம். திரைப்படத் துறையில் ஒரு படம் தோற்றால் அடுத்த படத்தில் வெற்றி பெற்றுவிடலாம்; ஆனால் அரசியல் அவ்வாறு அல்ல. தொடர்ச்சியான களப்பணியும் வெற்றியும் மட்டுமே மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றுத் தரும். விஜய் இன்னும் அரசியல் கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளைத் தாண்டி அவர் அரசியலில் நிலைத்து நின்றால் மட்டுமே, அவரால் முழுமையான அரசியல் புரிதலைப் பெற முடியும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *