நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள டெங்கு பரிசோதனைகளில், பாடசாலை வளாக சூழல்களிலேயே டெங்கு நுளம்பு குடம்பிகள் உருவாகும் இடங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அது தொடர்பில் விளக்கமளித்துள்ள அமைச்சர், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளில் பாடசாலை வளாகங்களிலேயே 41 வீதமான டெங்கு சூழல் பதிவாகியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனைத் தவிர டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களாக சமய வழிபாட்டுத் தலங்கள்: 28%, தொழிற்சாலைகள் சார்ந்த இடங்கள்: 26% என பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது டெங்குப் பிரச்சினை 14 மாவட்டங்களில் பாரதூரமான நிலையை எட்டியுள்ளது.
அதற்கிணங்க டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுவது மிகவும் முக்கியமானது. ஒரு நாடாக நாம் அனைவரும் ஒரே நேரத்தில் இந்த விடயத்தில் தலையிட்டால் மாத்திரமே டெங்கு ஒழிப்பு திட்டத்தை வெற்றிகொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டிய விடயம் இது. டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மூலம் பரிசோதித்துள்ள இடங்களில் சுமார் 41 வீதம் பாடசாலை வளாகங்களில்தான் டெங்கு குடம்பிகள் உருவாகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சமய வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி 28 வீதம் மற்றும் தொழிற்சாலைகள் சார்ந்த இடங்களில் 26 வீதம் என அடையாளம் காணப்பட்டுள்ளது என்றார்.



