முன்னாள் அமைச்சர் விமலுக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணை

1 Min Read

சட்டவிரோதமான வகையில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுள்ள சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விமல் வீரவன்ச அமைச்சராகப் பணிபுரிந்த காலத்தில் தமது சட்டபூர்வ வருமானத்தை மிஞ்சிய வகையில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியமை தொடர்பிலேயே மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி தலைமையிலான குழுவினர், வழக்கின் சாட்சியாளர்களிடமிருந்து சாட்சியங்களை பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, மேலதிக சாட்சி விசாரணை ஜூன் மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், தனது சட்டபூர்வ வருமானத்தை விட 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை ஈட்டியதன் மூலம் இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகத் தெரிவித்து கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *