அபிவிருத்தி என்பதைக் கொள்கைகள் மற்றும் பொருளாதார மாதிரிகளின் மூலமாக மாத்திரம் புரிந்துகொள்ள இயலாது. அது மக்களின் அன்றாட வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும் என்பதுடன், அவர்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையிலும் அமைய வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (19) St Antony’s College, University of Oxford இல் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான OSGA வருடாந்த விரிவுரையின் போது, ‘அபிவிருத்தியின் அரசியல், இலங்கையும் அதற்கு அப்பாலும்’ எனும் தலைப்பில் உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒக்ஸ்போர்ட் உலகளாவிய மற்றும் பிராந்திய கற்கைகள் கலாசாலையின் (OSGA) மாணவர்கள், கல்விமான்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், இலங்கையின் அபிவிருத்தி, நல்லாட்சி மற்றும் அரசியல் ஆகியவற்றின் இடைவெளிகள் குறித்து எடுத்துரைத்தார். இதன்போது பெண்களின் அரசியல் பங்களிப்பு,ப் பராமரிப்புப் பொருளாதாரம், சமூக நீதி மற்றும் மக்கள் போராட்டங்களை நீண்டகால நிறுவன ரீதியான சீர்திருத்தங்களாக மாற்றியமைப்பதில் உள்ள சவால்கள் குறித்தும் பிரதமர் விசேட கவனம் செலுத்தினார்.



