தேசிய போர்வீரர் நினைவு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (19) முற்பகல் ராகம பகுதியில் அமைந்துள்ள ‘ரணவிரு செவன’ (Ranaviru Sevana) புனர்வாழ்வு மற்றும் நல்வாழ்வு மையத்திற்கு விசேட விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் இராணுவ வீரர்களை நேரில் சந்தித்து அவர்களின் சுகதுக்கங்களை அவர் கேட்டறிந்தார்.
சிகிச்சை பெற்று வரும் போர்வீரர்களுடன் மிகவும் சுமுகமாக கலந்துரையாடிய ஜனாதிபதி, தாய்நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் சுதந்திரத்திற்காகவும் அவர்கள் செய்த உன்னதமான அர்ப்பணிப்புகளையும் தியாகங்களையும் ஆழமாகப் பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து, “ரணவிரு செவன” மையத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட வைத்தியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைச் சந்தித்த ஜனாதிபதி, அங்கு சிகிச்சை பெறும் வீரர்களுக்கு வழங்கப்படும் மருத்துவச் சேவைகள் மற்றும் ஏனைய வசதிகள் குறித்துக் கேட்டறிந்ததுடன், அவர்களுக்குத் தேவையான கூடுதல் வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடினார்.



