சவூதி அரேபியாவின் மன்னரும் இரு புனித ஸ்தலங்களின் பாதுகாவலருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூதின் ஹஜ் மற்றும் உம்ரா விருந்தினர் திட்டத்தின் கீழ் இவ்வருடம் 16 இலங்கையர்கள் ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் – கஹ்தானியின் சிபாரிசின் அடிப்படையில் இந்த வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்துள்ளது.
இந்த ஹஜ் பயண திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 16 பேர்களில் பாதுகாப்பு அதிகாரிகள், சிவில் அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் பயணத்திற்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வு, இ்ன்று (06) கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தில் சவூதி தூதுவர் தலைமையில் இடம்பெற்றது.
சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சின் மேற்பார்வையில் ‘மன்னர் சல்மானின் ஹஜ் மற்றும் உம்ரா விருந்தினர் திட்டத்தின்’ (King Salman’s Guest Program for Hajj and Umrah) செயல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



