உலக சந்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணெய் விலை வரலாற்று சிறப்புமிக்க வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
ஒரே நாளில் 20 டொலருக்கு மேல் சரிந்து, பீப்பாய் ஒன்றின் விலை 90 டொலருக்கு கீழ் குறைந்துள்ளது.
இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானுடன் நடைபெறும் போர் விரைவில் முடிவடைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தது தான்.
இதனால் சந்தையில் எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது.

முன்னதாக Brent Crude எண்ணெய் பீப்பாய்க்கு 119.50 டொலர் வரை உயர்ந்திருந்த நிலையில், 88.36 டொலருக்கு சரிந்தது. அதேபோல், US crude எண்ணெய் 85.17 டொலருக்கு குறைந்தது.
ஆனால், ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது. “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்ந்தால், ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளிநாடுகளுக்கு அனுப்ப அனுமதிக்கமாட்டோம்” என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ஈராக் மற்றும் குவைத் போன்ற வளைகுடா நாடுகள் உற்பத்தியை குறைத்துள்ளன. ஈராக் தனது முக்கிய தெற்கு எண்ணெய் களங்களில் 70 சதவீதம் உற்பத்தியை குறைத்துள்ளது.
இந்த நிலைமை, இந்தியாவிற்கு பெரும் சவாலாக உள்ளது. எண்ணெய் விலை ஒவ்வொரு டொலர் உயர்வும் இந்தியாவின் வருடாந்திர இறக்குமதி செலவை சுமார் 2 பில்லியன் டொலராக அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், ரூபாய் மதிப்பு குறையும் அபாயம், கப்பல் போக்குவரத்து செலவுகள், காப்பீட்டு கட்டணங்கள் ஆகியவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இதனால் உலகளாவிய சந்தைகளில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. போர் முடிவடையும் என்ற நம்பிக்கை விலை குறைவுக்கு காரணமாக இருந்தாலும், வளைகுடா நாடுகளின் எச்சரிக்கைகள் எதிர்காலத்தில் விலையை மீண்டும் உயர்த்தக்கூடும்.




