மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்த இலங்கை அணி மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரை 1–2 என இழந்தது.
கிங்ஸ்டன், சபீனா பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று (15) நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை கடைசி வரை ஆதிக்கம் செலுத்தியபோதும் ஜேசன் ஹோல்டர் கடைசி ஓவர்களில் ஆட்டத்தை திசை திருப்பினார். 170 ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணி கடைசி இரு ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 29 ஓவர்களை பெற வேண்டி இருந்து.
அப்போது 19 ஆவது ஓவரை வீச வந்த துஷ்மன்த சமீரவுக்கு ஜேசன் ஹோல்டர் மூன்று சிக்ஸர்களை விளாச அந்த ஓவரில் சமீர 23 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதனால் மேற்கிந்திய தீவுகளின் வெற்றி இலக்கு கடைசி ஓவருக்கு 6 ஓட்டங்களால் இலகுவாக மாறியது. இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
ஜேசன் ஹோர்டர் 5 பந்துகளில் ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களைப் பெற்றதோடு ஷெர்பேன் ருதர்போர்ட் ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களைப் பெற்றார். ருதர்போர்ட்டின் இரு பிடியெடுப்புகளை தவறவிட்டதும் இலங்கை அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணி சார்பில் துனித் வெள்ளாலகே மத்திய வரிசையில் 43 ஓட்டங்களை பெற்றார். ஆரம்ப வீரர் பத்தும் நிசங்க 17 பந்துகளில் 26 ஓட்டங்களைப் பெற்றபோது டி20 போட்டிகளில் இலங்கை சார்பில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் வரிசையில் குசல் மெண்டிஸை பின் தள்ளினார். இதில் நிசங்க 2699 ஓட்டங்களைப் பெற்றிருப்பதோடு மெண்டிஸ் 2694 ஓட்டங்களை பெற்றிருப்பதால் முன்னிலை பெறுவதில் இருவருக்கும் இடையே தொடர்ந்து போட்டி நிலவுகிறது.



