பாகிஸ்தான் மகளிர் அணி ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் ஆடுவதற்காக எதிர்வரும் ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இதில் ஐ.சி.சி. மகளிர் சம்பியன்சிப் பருவத்தின் ஓர் அங்கமாகவே ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் ஜூலை 25 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் டி20 தொடரும் ஹம்பாந்தோட்டையிலேயே நடத்த ஏற்பாடாகியுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி ஜூலை 31 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் மற்ற இரு போட்டிகளும் ஓகஸ்ட் 2 மற்றும் 4 ஆம் திகதிகளில் நடைபெறும்.



