பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டி வரலாற்றில் முதல்முறை 48 அணிகளுடன் மொத்தம் 104 போட்டிகளைக் கொண்டதாக இன்று (11) ஆரம்பமாகவுள்ளது.
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா இணைந்து நடத்தும் இந்த உலகக் கிண்ணத்தின் போட்டிகள் இலங்கை நேரப்படி நாளைய தினத்திலேயே ஆரம்பமாகும். இதன்படி மெக்சிகோ மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மெக்சிகோ சிட்டியில் மோதும் முதல் போட்டி இலங்கை நேரப்படி நாளை நள்ளிரவு தாண்டி 12.30 மணிக்கே ஆரம்பமாகும்.
இதன்படி இந்த மூன்று நாடுகளில் மொத்தம் 16 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும். போட்டிகள் இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.30 மணி, அதிகாலை 3.30 மணி, காலை 6.30 மணி, 9.30 மணி ஆகிய நேரங்களில் நடைபெற உள்ளன. நான்கு அணிகளாக பிரிக்கப்பட்ட குழுநிலைச் சுற்றின் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மற்றும் குழு வரிசையில் முன்னிலையில் உள்ள 3ஆம் இடம் பெறும் 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் 32) தகுதி பெறும். அதன்பின்னர் கால், அரை, இறுதிச் சுற்றுப் போட்டிகள் இடம்பெறும்.
இதன்படி உலகக் கிண்ண இறுதிப் போட்டி இலங்கை நேரப்படி ஜூலை 20 ஆம் திகதி மு.ப. 12.30 இற்கு நியூயோர்க், நியூ ஜெர்சி அரங்கில் நடைபெறவுள்ளது.
இதில் 1970 மற்றும் 1986 உலகக் கிண்ணத்திற்கு பின்னர் 3ஆவது முறையாக மெக்சிகோவில் பிஃபா உலகக் கிண்ணம் நடைபெறுகிறது. அமெரிக்காவில் 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. கனடாவில் பிஃபா உலகக் கிண்ணம் நடப்பது இதுவே முதல் முறையாகும்.
குறிப்பாக பிஃபா உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த உலகக் கிண்ணத்தில் 32 அணிகள் பங்கேற்றிருந்தன.
அதிகபட்சமாக ஐரோப்பாவைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்கின்றன. 10 ஆபிரிக்க அணிகள், ஆசிய கால்பந்து கூட்டமைப்பைச் சேர்ந்த 9 அணிகள் இடம்பெறுகின்றன. வட அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்காவிலிருந்து தலா 6 அணிகள் ஆடுகின்றன. ஒஷானியா பிராந்தியத்தில் இருந்து நியூசிலாந்து பங்கேற்கிறது.
கேப் வெர்டே, குராசாவோ, உஸ்பெகிஸ்தான் மற்றும் ஜோர்தான் ஆகிய 4 நாடுகள் முதல் முறையாக பிஃபா உலகக் கிண்ணத்தில் ஆடவிருப்பதோடு 4 முறை உலகக் கிண்ணத்தை வென்ற அணியான இத்தாலி தொடர்ந்து மூன்றாவது முறையாக இம்முறை தொடருக்கு தகுதி பெறவில்லை. அதேபோன்று, அனைத்து பிஃபா உலகக் கிண்ணங்களிலும் பங்கேற்கும் ஒரே அணி என்ற தங்களின் சாதனையை பிரேசில் தக்கவைத்துள்ளது.
இம்முறை உலகக் கிண்ணத்தில் மொத்தம் 48 அணிக்கு பங்கேற்றாலும் சம்பிரதாயமான வலுவான அணிகளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. அண்மைய போட்டிகள் மற்றும் அணியில் இடம்பெற்றிருக்கும் வலுவான வீரர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது சில அணிகளுக்கு இறுதிப் போட்டிவரை முன்னேறி கிண்ணத்தை தொட முடியும் என்று கணிக்கப்படுகிறது.
அதில் முன்னணியில் நடப்புச் சம்பியன் ஆர்ஜன்டினா, எப்போதுமே ஆதிக்கம் செலுத்தும் பிரேசிலுடன் ஐரோப்பாவின் ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். எனினும் போர்த்துகல், ஜெர்மனி, உருகுவாய், மொரோக்கோ அணிகளை குறைத்து மதிப்பிட முடியாது.



