உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பாடலுக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் பாடல்களை பாடிய குற்றச்சாட்டில், கிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்,கைதாகிஎதிர்வரும் (17) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் வௌிவரும் பின்னணியிலேயே,
தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதுபற்றித் தெரிய வருவதாவது;
உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்து சமூக வலைத்தளங்களில் வெளியான பாடல்களில், புலிகள் பற்றியும் புலிகளின் தலைவருக்கு வல்வெட்டித்துறையில் சிலை நிறுவுவோம் எனவும் குறிப்பிடப்பட்டி ருந்தது.புலிகளைப் புகழ்பாடும் பாடல்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தலாம் எனில் , கிளிநொச்சி இளைஞனின் பாடலுக்காக அவருக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ஏன்,நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.இது தொடர்பில் , தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனிடம் கேட்ட போதே , அப்பாடலுக்கும் தமது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.



