பிஃபா உலகக் கிண்ணம் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு வாரமும் இல்லாத நிலையில் அமெரிக்கா விசாவை பெறுவதற்கு தொடர்ந்து காத்திருக்கும் ஈரான் அணி உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் வகையில் நாளை (06) மெக்சிகோ பயணமாகவுள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பெப்ரவரியில் போர் தொடுத்தது தொடக்கம் உலகக் கிண்ணத்தில் ஈரான் பங்கேற்பதில் சந்தேகம் நிலவி வந்தது. அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி ஆரம்பமாகும் பிஃபா உலகக் கிண்ணத்தில் ஈரான் தனது குழுநிலை போட்டிகள் அனைத்தையும் அமெரிக்காவிலேயே ஆடவுள்ளது. இந்நிலையில் உலகக் கிண்ணத்திற்கு ஈரான் அணி மெக்சிகோவில் முகாமிட்டு ஆடவுள்ளதாக ஈரான் கால்பந்து சம்மேளனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதுவரை துருக்கியில் பயிற்சி மேற்கொண்டு வந்த ஈரான் நாளை அங்கிருந்து மெக்சிகோ செல்லவுள்ளது. இம்முறை உலகக் கிண்ணத்தில் ஜி குழுவில் இடம்பெற்றிருக்கும் ஈரான், நியூசிலாந்து மற்றும் பெல்ஜியத்திற்கு எதிராக ஜூன் 15 மற்றும் 21 ஆம் திகதிகளில் லொஸ் ஏஞ்சல்ஸில் தனது முதல் இரு போட்டிகளிலும் ஆடவிருப்பதோடு ஜூன் 26 ஆம் திகதி சியாட்டலில் நடைபெறும் கடைசி குழுசிலை போட்டியில் எகிப்தை எதிர்கொள்ளவுள்ளது.



