மாணவ தாதியர் 3,000 பேரை சேவையில் இணைக்க திட்டம்

1 Min Read

நாட்டின் சுகாதாரத்துறையில் நிலவும் ஊழியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் முதல் கட்டமாக 3,000 மாணவ தாதியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கடந்த மே மாதம் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இதற்கான விண்ணப்பம் கோரல் இம்மாதம் 30ஆம் திகதிவரை இடம்பெறுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டலின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள இந்த 13,600 தாதியர் நியமனக்கொள்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 2021, 2022, 2023 அல்லது 2024ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானம் அல்லது கணிதப் பிரிவுகளில் சித்தி அடைந்த மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியுமென்பதுடன், தகுதியான விண்ணப்பதாரர்கள் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.health.gov.lk மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமெனவும் அந்த அமைச்சு தெரிவித்தது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகப் பரீட்சைகளின் பின்னர் தாதியர் சேவைக்காக தெரிவு செய்யப்படுவரென்பதுன், இவ்வாறு தெரிவு செய்யப்படும் மாணவ தாதியர்களுக்கான தொழில்முறை பயிற்சிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்படுமெனவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது. 2025ஆம் ஆண்டு முதல் 2029ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் தாதியர் சேவைக்கு 13,600 உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்துக்கொள்ளும் 5 வருடத் திட்டத்தின் முதல் கட்டமாக இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *